கோவை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியருக்கு பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டம், ப்ரீ மெட்ரிக் திட்டம், போஸ்ட் மெட்ரிக் திட்டம், உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டத்தில் பயன்பெற, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவியராக இருக்க வேண்டும்.
பெற்றோரின் ஆண்டு வருமானத்துக்கு உச்ச வரம்பு இல்லை. கல்வி உதவித்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், மாணவியர் வங்கி கணக்கு பராமரிக்க வேண்டும்.
ப்ரீ மெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்களின் ஜாதிச்சான்று, வருமானச்சான்று, ஆதார், முந்தைய ஆண்டின் வருகை சான்று மற்றும் வங்கி கணக்கு முதல் பக்க நகல் இணைத்து, சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்களின் பெயர், கல்வி சான்றிதழில் இருப்பதைபோல், ஆதார் மற்றும் வங்கி கணக்கில் இடம்பெற்றிருக்க வேண்டும். மாணவியர் மற்றும் பெற்றோரின் மொபைல் போன் எண் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
உயர் கல்வி சிறப்பு உதவி தொகை பெற, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவியராக இருக்க வேண்டும். அரசு அனுமதி பெற்ற தனியார் விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவியராக இருந்தால், கல்லுாரி முதல்வர் பரிந்துரையோடு விண்ணப்பிக்க வேண்டும்.
பெற்றோர் குடும்ப வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை பெற விரும்பும் மாணவியர், படிக்கும் கல்வி நிறுவனங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.