சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாடுகளில் சிறுதானிய உணவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
ஐ.நா.சபை, இந்த ஆண்டை சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக அறிவித்துள்ளது.மற்ற தானியங்களோடு ஒப்பிடுகையில், சிறுதானியங்கள் அதிக ஆற்றல் கொண்டவை. புரதம் மற்றும் தாது உப்புகளின் எண்ணிக்கையும் அதிகம்.
ஜி 20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஜி 20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்த பட்டியலில் கோவையும் இடம்பிடித்துள்ளது.
இந்த மாநாடுகளில் வழங்கப்படும் உணவுகளில், சிறு தானிய உணவு வகைகள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே, நாடாளுமன்ற கேன்டீனில் வழங்கப்படும் சிற்றுண்டிகளில் சிறுதானிய உணவுகள் இடம்பெறத் தொடங்கிவிட்டன.
தினசரி ஒருவேளையாவது, நமது உணவில் சிறுதானியம் இடம்பெற வேண்டும் என்ற பிரசாரத்தையும் அரசு முன்னெடுத்து வருகிறது. மத்திய அரசு நிறுவனங்களும், சிறுதானிய உணவை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சகத்தின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், பழங்குடியின மக்களுக்கு சிறுதானிய விதைகள் வழங்கப்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடியின குழந்தைகளுக்கும், தாய்மார்களுக்கும் போதிய ஊட்டச்சத்து கிடைக்க, அவர்களின் அன்றாட உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக் கொள்வதை ஊக்குவிக்க, அவர்களுக்கு சிறுதானிய விதைகள் வழங்கப்படுகின்றன.