'மாண்டஸ்' புயலில் சேதமடைந்த பயிர்... 3,267 ஏக்கர்!: நிதி கிடைத்ததும் விவசாயிகளுக்கு நிவாரணம்

Added : ஜன 29, 2023 | |
Advertisement
திருவள்ளூர்,-திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு வீசிய, 'மாண்டஸ்' புயல் காரணமாக, 3,267 ஏக்கர் பயிர் சேதமடைந்த விபரம் குறித்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நிவாரணம் வழங்கப்படும் என, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.திருவள்ளூர் மாவட்டத்தில், சம்பா பருவத்தில், 1.5 லட்சம் ஏக்கர் பரப்பில்
3,267 Acres Crop Damaged by Storm Mantus!: Relief to Farmers as Funds Received  'மாண்டஸ்' புயலில் சேதமடைந்த பயிர்... 3,267   ஏக்கர்!:  நிதி கிடைத்ததும் விவசாயிகளுக்கு நிவாரணம்



திருவள்ளூர்,-திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு வீசிய, 'மாண்டஸ்' புயல் காரணமாக, 3,267 ஏக்கர் பயிர் சேதமடைந்த விபரம் குறித்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நிவாரணம் வழங்கப்படும் என, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், சம்பா பருவத்தில், 1.5 லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள், நெல், பச்சைப் பயிர், வேர்க்கடலை மற்றும் தோட்டக்கலை பயிர் விவசாயம் செய்தனர். இந்த நிலையில், கடந்த, டிச.8 - 12ம் தேதி வரை, 'மாண்டஸ்' புயல் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது.

மழை நீர், விவசாய நிலங்களில் சூழ்ந்ததால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெல் மற்றும் பயிர்கள் தண்ணீரில் மிதந்தன.

திருவள்ளூர் மாவட்ட வேளாண் துறையினர், துரித நடவடிக்கை மேற்கொண்டு, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, விளை நிலங்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற, தகுந்த ஆலோசனை வழங்கினார்.


பாதிப்பு



இருப்பினும், மழை நீர் சூழ்ந்ததால், நெல், பச்சைப் பயிர் மற்றும் தோட்டக்கலை பயிர் என, மொத்தம், 3,267 ஏக்கர் பயிர் சேதமடைந்ததாக, வருவாய் மற்றும் வேளாண் துறையினரின் கணக்கெடுப்பில் தெரிய வந்தது. பயிர் சேத விபரம் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.


விவசாயிகளுக்கு உறுதி



இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், 'மாண்டஸ்' புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வழங்கப்படும் மனுக்களுக்கு, உரிய ரசீது வழங்கி, முறையாக பதில் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கையினை முறையிட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் பதில் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு அக்.1 - நவ.21ம் தேதி வரை பெய்த, வடகிழக்கு பருவ கன மழை காரணமாக, 642 ஏக்கர் வேளாண்மை பயிர் 33 சதவீதத்திற்கு மேல் சேதமடைந்தது.

மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையால், பாதிக்கப்பட்ட, 312 விவசாயிகளுக்கு, 34.80 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டு உள்ளது.

'மாண்டஸ்' புயல் காரணமாக, கடந்த டிச.8 - 12ம் தேதி வரை, பெய்த கன மழையின் காரணமாக, நெல், பச்சைப் பயறு, வேர்க்கடலை மற்றும் தோட்டக்கலைப் பயிர் என, மொத்தம், 3,267 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாக, வருவாய் மற்றும் வேளாண் துறையின் கணக்கெடுப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கை, கடந்த மாதம் அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அரசிடமிருந்து விரைவில் நிதி பெறப்பட்டதும், உடனடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில், நிவாரண நிதி வரவு வைக்கப்படும்.


நவரை பருவம்



நடப்பாண்டில் சம்பா பருவ அறுவடை முடிவுற்று, நவரை பருவம் துவங்கியுள்ள நிலையில், விவசாயிகள் அனைவரும் நெல்லுக்குப் பின் பயறு வகை பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்யலாம். கடந்த ஆண்டு, 1 லட்சத்து 29 ஆயிரத்து 640 ஏக்கர் பரப்பில் பயறு வகை சாகுபடி செய்யப்பட்டது.

குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின்கீழ், 4 லட்சத்து 2 ஆயிரம் கிலோ பயறு வகை பயிர்கள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் வாயிலாக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

விவசாயிகள் பயறு வகை பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின்கீழ் பயன் பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

அதை தொடர்ந்து, வேளாண் துறை சார்பாக, 18 விவசாயிகளுக்கு 11.59 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்வேறு வகையான நலத்திட்ட உதவியினை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில், வேளாண் இணை இயக்குனர் சுரேஷ், கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர் சண்முகவள்ளி, தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெபக்குமாரி அனி, வேளாண் பொறியியல் துறை செயற் பொறியாளர் சமுத்திரம் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X