''பேப்பர் போடும் வேலையில் வரும் வருமானம் குறைவு என்றாலும், இந்த பணியை செய்வதில் எனக்கு மகிழ்ச்சியும், மனநிறைவும் இருக்கிறது,'' என்கிறார் பேப்பர் ஏஜென்ட் கருப்பசாமி.
கோவை சுந்தராபுரம், சரவணா நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் கடந்த, 25 ஆண்டுகளுக்கு மேலாக சைக்கிளில் சென்று, செய்தித்தாள் போடும் பணியை செய்து வருகிறார்.
அதிகாலை, 4:00 மணிக்கு எழுத்து விடும் இவர், 5:00 மணிக்கு சைக்கிள் கேரியரில் செய்தித்தாள்களை கட்டிக்கொண்டு, பணிகளை துவங்கி விடுகிறார். காலை 8:00 மணிக்குள் பேப்பர் போட்டு முடித்து விடுகிறார்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில், பேப்பர் போட்டு முடித்து விட்டு, வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த கருப்பசாமியை, வழியில் கண்டு பேசினோம்...
''எனக்கு, 57 வயசாகுதுங்க, ஒரு நாளு கூட சோர்வோ, களைப்போ இருந்ததில்லிங்க. காய்ச்சல், தலவலி வந்தா கூட வீட்டுல இருக்க மாட்டேன். சைக்கிளை எடுத்துக்கிட்டு பேப்பர் போட பறந்துடுவேன். அடமழை பேஞ்சாலும் நிக்காம கிளம்பிடுவேன்,''.
''எல்லா பேப்பரும் போடுறேன். அதுல தினமலர்தான் அதிகமா போடுறேன். புதுசா சந்தா போடுறவங்க தினமலரை தான் கேக்கிறாங்க,''
பேப்பரை வீசி எறிய மாட்டேன். மடிப்பு கலையாம காம்பவுண்டுக்குள்ள வச்சட்டுத்தான் வருவேன். அதனால் சந்தாதாரர்களுக்கு என்ன ரொம்ப பிடிக்கும்,'' என்கிறார் உற்சாகமாய்.
''இந்த வேலையில வருமானம் குறைவாச்சே...எப்படி சமாளிக்கிறீங்க...உங்க குடும்பத்தை பத்தி சொல்லுங்க...'' என்று கேள்விகளை அடுக்கினோம்.
''பேப்பர் போடுற வேலய மரியாத குறைவான வேலன்னு நினைக்கிறாங்க. ஆனா நான் அப்படி நினைக்கிறதில்லீங்க. வருமானம் குறைவா இருந்தாலும், இந்த வேலைய செய்யிறதுல எனக்கு ஒரு சந்தோஷமும், மனநிறைவும் இருக்கு.
இந்த வேலய செஞ்சுதான் என் மகன பிசியோதெரபிஸ்ட் வேலைக்கு படிக்க வச்சேன். இன்னொருத்தன ஐ.டி., இன்ஜினியராக்கி இருக்கேன். இப்ப மகனுக ரெண்டு பேரும், நல்லா சம்பாதிக்கிறாங்க,'' என்று மனநிறைவுடன் பேசினார்.
''இன்னும் எத்தனை வருஷம் இந்த வேலை செய்றதா உத்தேசம்?''
''என்னை பேப்பர் போட போக வேண்டாம்னுதான் பிள்ளைங்க சொல்றாங்க. ஆனா என்னால வீட்டுல சும்மா இருக்க முடியல. உடம்புல சைக்கிள் மிதிக்க தெம்பு இருக்கிற வரைக்கும், பேப்பர் போட்டுக்கிட்டுதான் இருப்பேன். காரணம், பேப்பர் போடுறதை பெருமையா நினைக்கிறேன்,'' என்று கூறியபடி பெடலை அழுத்த ஆரம்பித்தார் கருப்பசாமி.
கருப்பசாமியை போல் உழைப்பை மதிக்கும், உணர்வு பூர்வமான மனிதர்கள் இன்னும் பலர் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.