மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சி, 9 பேரூராட்சிகள் உள்ளது. இதில் மாநகராட்சி , நகராட்சிகளில் உள்ள பஸ் ஸ்டாண்ட்களுக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் பஸ் ஸ்டாண்ட் சுற்றுவட்ட பகுதியில் அதிக போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. மக்கள் எளிதில் வந்து, செல்ல முடியாத நிலை உள்ளது.
மக்கள் பஸ்சிற்காக காத்திருக்கும் நேரத்தில் உட்காருவதற்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. இருக்கும் இருக்கைகளும் சேதமடைந்து காணப்படுகிறது. அதேபோல் கட்டணமில்லா கழிப்பிடங்கள் மட்டுமின்றி கட்டண கழிப்பிடங்கள் கூட துர்நாற்றத்துடன் உள்ளது.
மேலும் பஸ் ஸ்டாண்ட் , அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்களில் உணவு பொருட்கள் திறந்த வெளியில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது மக்களுக்கு நோய் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை உருவாக்குகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டில் வாறுகால்களில் கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேடு காணப்படுகிறது. நடைபாதை கற்கள் பெயர்ந்தும், போதிய இருக்கை வசதி இல்லாமல் பயணிக்கள் நின்று கொண்டே இருக்கின்றனர். கட்டணமில்லா கழிப்பிடத்தில் எழும் துர்நாற்றத்தால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
ராஜபாளையம் புதிய பஸ் ஸ்டாண்டில் போதிய அளவிற்கு இருக்கை வசதி இல்லாமலும், சேதமடைந்த இருக்கைகளும் காணப்படுகிறது. இதேநிலை சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை பஸ் ஸ்டாண்ட்களில் காணப்படுகிறது.
பேரூராட்சி பகுதிகளை பொறுத்தவரை கூமாபட்டியில் காலியிடமே பஸ் ஸ்டாண்டாக செயல்படுகிறது. இதே நிலைதான் சுந்தரபாண்டியம், புதுப்பட்டி, மம்சாபுரம் பேரூராட்சி காணப்படுகிறது. வத்திராயிருப்பு பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்டு சீரமைப்பு பணிகள் பல மாதங்களாக நடந்தாலும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் வத்திராயிருப்பு மக்கள் ரோட்டில் நிற்க வேண்டிய நிலை உள்ளது.
ஒரு உள்ளாட்சி நிர்வாகத்தின் சரியான செயல்பாட்டிற்கு அங்குள்ள பஸ் ஸ்டாண்ட்களின் தரமே சான்றாகும். மாவட்டத்திலுள்ள அனைத்து பஸ்ஸ்டாண்ட்களிலும் ஆக்கிரமிப்பு, போக்குவரத்து நெருக்கடி, சுகாதாரக் கேடு, அடிப்படை வசதி குறைபாடுகளுடன் காணப்படுகிறது.
அதிகளவில் வரி வருவாய் கிடைத்த போதிலும் வருடத்திற்கு ஒருமுறை கூட பஸ் ஸ்டாண்டில் சுண்ணாம்பு வெள்ளையோ, பெயிண்ட் அடிப்பதோ கூட கிடையாது. இதனால் பஸ் ஸ்டாண்ட்களில் தூசிகள் படர்ந்து காணப்படுகிறது.
எனவே, மாவட்டத்திலுள்ள அனைத்து பஸ் ஸ்டாண்ட்களில் காணப்படும் அனைத்து அடிப்படை குறைபாடுகளையும் சரி செய்து, பொதுமக்கள் எளிதில் வந்து செல்லவும், சுகாதாரமான சூழலை ஏற்படுத்தவும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை கலெக்டர் அடிக்கடி ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என விருதுநகர் மாவட்ட மக்கள் எதிர்பார்க்கின்றனர்.