சிவகாசி,-சிவகாசி ஆனைக்குட்டத்தில் சேதம் அடைந்துள்ள ஊராட்சி சேவை மைய கட்டடத்தால் மகளிர் குழுவினர் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி அருகே ஆனைக்குட்டத்தில் 2015ல் ரூ.14.55 லட்சத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சி சேவை மையம் கட்டப்பட்டது. கிராம மக்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க நகர்ப்புறங்களுக்கு அலைய கூடாது என்பதற்காக கிராமத்தில் சேவை மையம் கட்டடம் கட்டப்பட்டது.
ஆனால் இந்த கட்டடம் கட்டப்பட்ட நாளிலிருந்து இது நாள் வரையிலும் எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அதற்கு பயன்படவில்லை. ஆனால் தற்போது இக்கட்டடத்தில் மகளிர் குழு செயல்பட்டு வருகிறது. வேறு பயன்பாட்டிற்கு வந்த கட்டடத்தில் ஆங்காங்கே சிமென்ட் பெயர்ந்துள்ளது.
முன்புறம் தரைதளம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதனால் இங்கு செயல்படும் மகளிர் குழுவை சார்ந்த பெண்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே கட்டடத்தில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு சீரமைக்க வேண்டும் என மகளிர் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.