நரிக்குடி--நரிக்குடி சீனிமடையில் ஆழ்துளை கிணறு அமைத்து 3 ஆண்டாகியும் மின்வாரியத்திற்கு பணம்செலுத்தி ஆறு மாதங்களாகியும் மின் இணைப்பு கொடுக்காததால் குடிநீருக்காக மக்கள் திண்டாடி வருகின்றனர்.
நரிக்குடி நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட சீனிமடையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக் கிராமத்திற்கு நாலூர் விலக்கிலிருந்து ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
நாளடைவில் குடிநீர் சுவை மாறியதால் உப்பு தண்ணீரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பல்வேறு கோரிக்கைக்கு பின் தாமிரபரணி குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தாமிரபரணி குடிநீரும் தொடர்ந்து கிடைக்காததால் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண 5 ஆண்டுக்கு முன் அங்குள்ள கண்மாய் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டும் பயன்படுத்த காலதாமதம் ஏற்பட்டதால் தூர்ந்து போனது.
குடிநீர் பிரச்னை பெரிதானதையடுத்து 3 ஆண்டுகளுக்கு முன் ரூ. 3 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் மற்றொரு ஆழ்துளை கிணறு அமைத்து பம்ப் ரூம் கட்டப்பட்டது. மின் இணைப்பு வேண்டி பணம் செலுத்தப்பட்டது.
பல மாதங்களாகியும் மின் இணைப்பு கொடுக்கவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.
பரமேஸ்வரி, நாலுார் ஊராட்சி தலைவர்: சீனிமடை கிராமத்திற்கு குடிநீர் சப்ளை செய்ய 6 மாதத்திற்கு முன் மின்வாரியத்தில் பணம் கட்டப்பட்டது. மின் கம்பங்கள் நட வேண்டி இருப்பதால் சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கப்படுவதால், காலதாமதம் ஏற்பட்டது.
தற்போது மின் கம்பங்கள் கொண்டு வரப்பட்டு, பணிகள் நடைபெற உள்ளன. விரைவில் மின் இணைப்பு பெற்று, அக்கிராமத்திற்கு குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.