கோவை:கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் விதிமுறையை மீறி அதிக கட்டணம் வசூலித்ததால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
கோவை கிராஸ்கட் ரோட்டில், மாநகராட்சிக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடம் உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதி என்பதால், மூன்று மணி நேரத்துக்கு, 10 ரூபாய் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்துமிடத்தை பராமரித்து கட்டணம் வசூலிக்கும் உரிமையை, ஒப்பந்ததாரர் சந்திரசேகர் பெற்றிருந்தார்.
ஆனால், மாநகராட்சி விதிமுறையை மீறி, ஒரு மணி நேரத்துக்கு, 20 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதுதொடர்பாக, வீடியோ ஆதாரத்துடன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப்புக்கு பொதுமக்கள் புகார் அனுப்பினர்.
அதிர்ச்சியடைந்த கமிஷனர், கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க, மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ்க்கு உத்தரவிட்டார்.
அவரும், உதவி வருவாய் அலுவலர் கார்த்திக் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, அதிக கட்டணம் வசூலிப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து, ஒப்பந்தத்தை ரத்து செய்து, டெபாசிட் தொகையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, வாகன நிறுத்துமிடத்தை பராமரிக்கும் பொறுப்பை மாநகராட்சியே ஏற்றது. மாநகராட்சி ஊழியர் நியமிக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதேபோல், காந்திபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் மற்றும் டவுன் பஸ் ஸ்டாண்ட்டுகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களிலும் விதிமுறையை மீறி அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இங்கு நாளொன்றுக்கு, 20 ரூபாய் வசூலிக்க வேண்டும்; 12 மணி நேரத்துக்கு, 10 ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால், வாகனம் நிறுத்தும்போதே, 20 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
கட்டணம் தொடர்பான அறிவிப்பு பலகை, அழிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக, மாநகராட்சி மத்திய மண்டல அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்துகின்றனர். கமிஷனருக்கு புகார் அனுப்பினால் மட்டுமே நடவடிக்கை எடுப்பார்கள் போலிருக்கிறது.