கோவை:குறிச்சி, குனியமுத்துாரில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை செப்., மாதத்துக்குள் முடிக்க, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட, 87 முதல், 100வது வார்டு வரை, 14 வார்டு மக்கள் பயன்பெறும் வகையில், குறிச்சி மற்றும் குனியமுத்துார் பகுதியில், ரூ.591.34 கோடியில், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கிய இத்திட்டம், தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 18 மாதங்களாகியும் இன்னும் தாமதமாகி வருகிறது.
கொரோனா தொற்று பரவலை காரணம் கூறியதால், 2023 மார்ச் மாதத்துக்குள் முடிக்க, அவகாசம் வழங்கப்பட்டது. கெடு முடிய இன்னும் இரு மாதங்களே இருக்கிறது.
'பம்ப்பிங் ஸ்டேஷன்' கட்டுவது; 'மேனுவல்' கட்டுவது, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டில் குழாய் பதிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிலுவையில் இருக்கின்றன.
அதனால், ஒப்பந்தம் எடுத்துள்ள எல் அண்டு டி நிறுவன உயரதிகாரிகளுடன், மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்தனர். அதன்பின், ஜூன் வரையிலான செயல் திட்ட அறிக்கையை அந்நிறுவனம் சமர்ப்பித்திருக்கிறது.
இதைத்தொடர்ந்து, மாச்சம்பாளையத்தில் 'பம்ப்பிங் ஸ்டேஷன்' கட்டும் பணியை, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் நேற்று கூட்டாய்வு செய்தனர்.
நிர்வாக பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி நிர்வாக பொறியாளர்கள் மதியழகன், கீதாதேவி உள்ளிட்டோர், திட்ட செயலாக்கம் தொடர்பாக விளக்கினர்.
மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில், ''செட்டிபாளையத்தில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டு விட்டது; குடிநீர் வடிகால் வாரியத்தினர் ஒரே ஒரு நாள் அவகாசம் கோரியுள்ளனர். அதன்பின், நெடுஞ்சாலைத்துறையினர் மூலமாக ரோடு போடப்படும்.
போத்தனுாரில், 2.5 கி.மீ., துாரத்துக்கு குழாய் பதிக்க வேண்டும்; 1.5 கி.மீ., முடிந்திருக்கிறது. வீட்டு இணைப்பு வழங்கியதும், ரோடு போடப்படும். ஜூன் வரையிலான 'ஆக் ஷன் பிளான்' தயாரிக்கப்பட்டு உள்ளது. செப்., மாதத்துக்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.