கோவை:கல்வியாண்டு முடிவடைய உள்ள நிலையில் தற்போதுதான், கணித உபகரண பெட்டி மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கணித உபகரண பெட்டி (ஜியாமெட்ரி பாக்ஸ்) இலவசமாக வழங்கப்படுகிறது.
இப்பெட்டி கல்வியாண்டு துவங்கியதும், மாணவர் சேர்க்கை அடிப்படையில், ஆண்டுதோறும் ஜூலை மாதம் விநியோகிக்கப்படும்.
கணித பாடத்திற்கான செய்முறை பகுதிகளுக்கு, தேவையான உபகரணங்கள் இதில் இருப்பதால், மாணவர்கள் கற்றல் செயல்பாடுகளுக்கு, பயன்படுத்தி கொள்வர்.
நடப்பாண்டில், கணித உபகரண பெட்டிக்கு, தகுதியான மாணவர்களின் விபரங்கள், ஜூலை மாதமே பெறப்பட்டது. ஆனால் இப்போதுதான், இப்பெட்டி பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பெற்றோர் சிலர் கூறுகையில், 'மாணவர்களுக்கான நலத்திட்ட பொருட்களை, அரசு இலவசமாக வழங்குகிறது. ஆனால், உரிய நேரத்தில் வழங்கினால்தான், பயன்படுத்த முடியும். ஜூலை மாதத்தில் தயாரிக்கப்பட்டதாக, பெட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கொள்முதல் செய்து ஜன., இறுதியில் வழங்குவதால் பலனில்லை. அடுத்த கல்வியாண்டிலாவது, நலத்திட்ட பொருட்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்' என்றனர்.