கோவை:பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்ட பணிகளை, ஏப்., இரண்டாவது வாரத்துக்குள் முடித்து, பரிசோதனை ஓட்டம் மேற்கொள்ள, குடிநீர் வடிகால் வாரியத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதியில் வசிப்போருக்கு சிறுவாணி, பில்லுார் அணைகள் மற்றும் பவானி, ஆழியாறு ஆறுகளில் இருந்து குடிநீர் எடுத்து, மக்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
சிறுவாணியில் போதுமான அளவு தண்ணீர் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டால், கோடையில் பற்றாக்குறை ஏற்படுகிறது.
2048 ல் மக்கள் தொகை
அதனால், 2048ல் இருக்கும் மக்கள் தொகையை கணக்கிட்டு, பற்றாக்குறையின்றி குடிநீர் வழங்க, பவானி ஆற்றில் தண்ணீர் எடுத்து வழங்கும் வகையில், ரூ.779.86 கோடி மதிப்பீட்டில், பில்லுார் மூன்றாவது திட்டம் தயாரிக்கப்பட்டது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், நாளொன்றுக்கு, 17.85 கோடி லிட்டர் 'பம்ப்' செய்ய முடியும்.
கட்டன்மலையில், 900 மீட்டர் நீளத்துக்கு குகை வழிப்பாதை (டனல்) அமைக்கும் பணி, 95 சதவீதம் முடிந்திருக்கிறது.
மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் வேலை நடந்து வருகிறது. சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணி, 80-85 சதவீதம் முடிந்திருக்கிறது.
பவானி ஆற்றில் இருந்து பன்னிமடை வரை, 35.22 கி.மீ., துாரத்துக்கு பிரதான குழாய் பதிக்க வேண்டும்; 10 கி.மீ.,க்கு பதிக்கப்பட்டு விட்டது; இன்னும், 25.22 கி.மீ., துாரத்துக்கு பதிக்க வேண்டும்.
நிலம் கையகப்படுத்துவதில் இருந்த சிக்கல் தீர்க்கப்பட்டு விட்டதால், மே மாதத்தில் திட்டத்தை துவக்கும் வகையில் பணிகளை முழுமையாக முடிக்க, தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, தேக்கம்பட்டி தலைமை நீரேற்று நிலையம் கட்டுமான பணி, மருதுார் ஊராட்சி தண்டிபெருமாள்புரத்தில் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, நீருந்து நிலையத்தில் 'பம்ப்' செய்து வினியோகிக்கும் குழாய் பதிக்கும் பணி ஆகியவற்றை, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் நேற்று நேரில் கூட்டாய்வு செய்தனர்.
திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் சீனிவாசன், மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார், செயற்பொறியாளர்கள் செல்லமுத்து, லட்சுமணன் உள்ளிட்டோர் விளக்கினர்.
மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில், ''குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. தேக்கம்பட்டி, மருதுாரில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இருந்தது. பிப்., முதல் வாரத்துக்குள் நிலம் கையகப்படுத்தி தருவதாக உறுதியளித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தியதில் பத்திரப்பதிவு செய்வதிலும் சிக்கல் இருக்கிறது. அதை விரைந்து நிவர்த்தி செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. ஏப்., இரண்டாவது வாரத்துக்குள் பணியை முழுமையாக முடித்து, பரிசோதனை ஓட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளோம். மே மாதம் திட்டத்தை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது,'' என்றார்.