காரியாபட்டி--வாறுகால் வசதி இல்லாது வீடுகளை சூழும் கழிவு நீர், வீதியின் நடுவே நடப்பட்டுள்ள மின்கம்பங்களால் செல்ல முடியாத வாகனங்கள், சேதமடைந்து பயன்பாடு இன்றி கிடக்கும் தரைதள தொட்டி, என காரியாபட்டி பேரூராட்சி 7வது வார்டு மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
இவ் வார்டுக்குட்பட்டது தாமரை தெரு, ரங்கராஜன் தெரு, சம்பங்கி தெரு, பாண்டியன்நகர் மேற்கு தெருக்கள் உள்ளன. ஒரு சில வீதிகள் மண் ரோடாக உள்ளன. மழை நேரங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர்.
வாறுகால் வசதி கிடையாது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே வீடுகளை சுற்றி தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகிறது. தாமரைத் தெருவில் செயல்பட்டு வந்த தரைதள தொட்டி செயல்பாடு இன்றி கிடக்கிறது. பெரும்பாலான இடங்களில் வீதிகளின் நடுவில் மின்கம்பங்கள் உள்ளதால் ஆத்திர அவசரத்திற்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டு வருகிறது.