பழநி ஆண்டவரை தரிசித்தால், தீராத வினைகள் எல்லாம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 16 ஆண்டுகளுக்கு பின், இப்போது பழநியில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்திருக்கிறது.
2000 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலின், ஸ்தல வரலாற்றில் கோவில் குறித்த பல சிறப்புகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்த ஸ்தல வரலாற்றில் இல்லாத, பல அரிய தகவல்கள், 'பழநி வேலாயுத ஸ்தல மஹாத்மியம்' என்ற, சிறு நுாலில் இடம் பெற்றுள்ளன.
கடந்த, 80 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த நுாலை, என்.கே.எம்., ஷெரீப் என்ற ஒரு இஸ்லாமியர் எழுதி இருக்கிறார். ஷெரீப்பின் தந்தை காதர் மைதீன் மஸ்தான், சிறந்த முருக பக்தர் என்பதால், அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இந்த நுாலை ஷெரீப் எழுதி இருக்கிறார்.
'பழநி வேலாயுத ஸ்தல மஹாத்மியம்' என்ற இந்த நுாலை, 1946ம் ஆண்டு வித்வான் ஒய்.நாராயண ஐயர் என்பவர் தமிழில் இருந்து மலையாள மொழிக்கு, மொழிபெயர்த்து வெளியிட்டு இருக்கிறார். கேரளாவில் இருந்து பழநிக்கு வரும் கேரள பக்தர்களுக்கு, இந்த நுால் ஒரு சிறந்த கையேடாக உள்ளது. 29 பக்கங்கள் கொண்ட இந்த நுாலில், 27 பகுதிகள் உள்ளன.
இந்த நுால், அன்றைக்கு எட்டு அனாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அன்றைய பக்தர்கள் இந்த புத்தகத்தை ஒன்பது அனா செலுத்தி தபாலில் பெற்றுள்ளனர்.
இது போன்ற, அரிய வகை கோவில் ஸ்தல வரலாற்று நுால்களை சேகரித்து வைத்துள்ள, முன்னாள் தபால் துறை அதிகாரி ஹரிஹரன், இந்த நுால் குறித்து கூறியதாவது:
அந்த காலத்தில் இருந்த இஸ்லாமியர்கள், இந்து கோவில்கள் மீது எந்த அளவுக்கு மதிப்பும், மரியாதையும் வைத்து இருந்தார்கள் என்பதற்கு, இந்த நுால் ஒரு உதாரணமாகும்.
இந்த நுாலாசிரியரின் தந்தை காதர் மைதீன் மஸ்தான், ஒரு முருக பக்தராக இருந்தவர். இவர் கோவில் அடிவாரத்தில் கடை வைத்து, பக்தி நுால்களை விற்பனை செய்திருக்கிறார்.
ஆண்டுதோறும் கேரளாவில் இருந்து, பழநி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம். இதற்கு காரணம், பழநி ஆண்டவர் கேரளத்தை நோக்கி பார்த்தபடி இருக்கிறார் என்பதாகும்.
முருகனின் அருள், கேரளத்துக்கு பூரணமாக கிடைக்கிறது என்பது, கேரள மக்களின் நம்பிக்கை. 77 ஆண்டுகளுக்கு முன் இந்த நுால், தமிழில் இருந்து மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இப்போது இந்த நுால் தமிழில் இல்லை, ஆனால் மலையாளத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த சிறு நுாலை அரிய பொக்கிஷமாக கருதி, பத்திரப்படுத்தி வைத்து இருக்கிறேன்,'' என்கிறார்.
நுாலில் என்ன உள்ளது?
பதினெட்டு வகையான காவடிகள் பற்றி தகவல்கள், வையாபுரிகுளம், சரவண பொய்கை உள்ளிட்ட ஒன்பது வகையான தீர்த்தங்கள், பழநியில் அந்த காலத்தில் இருந்த மடங்கள், 18 சித்தர்கள் மற்றும் அவர்களின் பிறப்பிடங்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. சிவகிரி என்ற பழநி மலையும், சக்தி கிரி என்ற இடும்பன் மலை பற்றியும், போகர் தண்டபாணி விக்ரகம் பிரதிஷ்டை செய்து, பூஜித்த விபரங்களும் இந்த அரிய புத்தகத்தில் உள்ளன.
Advertisement