தொண்டி,-தி.மு.க.,வை சேர்ந்தவர்தலைவராக உள்ள தொண்டி பேரூராட்சியில் வரவு, செலவு கணக்குகள்குறித்த வெளிப்படையான நிர்வாகம் இல்லை என்று தி.மு.க., கவுன்சிலர் குற்றம் சாட்டினார்.
தொண்டி பேரூராட்சி தலைவராக ஷாஜகான் பானு (தி.மு.க.,) உள்ளார். பேரூராட்சி 9 வது வார்டு கவுன்சிலர் மஹ்ஜபின் சல்மா (தி.மு.க.) கூறியதாவது:
தொண்டி பேரூராட்சி கூட்டம் நடக்கும் போது வரவு, செலவு குறித்த விபரங்கள் கேட்டால் அதற்கு செயல் அலுவலர் மற்றும் தலைவர் தரப்பில் இருந்து சரியான பதில் அளிக்கப்படுவதில்லை. வார்டுகளில் நடக்கும் வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகம் தரப்பில் கவுன்சிலர்களிடம் தெரிவிப்பது இல்லை.
கடந்த ஒன்பது மாதங்களில் பல்வேறு பணிகள் செய்யப்பட்டதாக வவுச்சர்கள் வரவு, செலவு கணக்குகள் கோப்புகளில் வைக்கப்பட்டுள்ளன. அதற்கான காரணங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கேட்டால் தலைவர், செயல் அலுவலர் தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ஜன.1ல் வரவு, செலவு குறித்து அறிக்கை தருமாறு செயல் அலுவலரிடம் கேட்டும் இதுவரை தரவில்லை, என்றார்.
செயல் அலுவலர் மகாலிங்கம் கூறுகையில், கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு முறையான விளக்கம் அளிக்கபட்டு வருகிறது. வரவு, செலவு குறித்து ஆவணங்கள் தயாராக உள்ளது. கவுன்சிலர்கள் அலுவலகத்திற்கு வந்து பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம், என்றார்.
Advertisement