திருப்பூர்:திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டும் பணி மந்தமாக நடந்து வருகிறது. இதனால், விரிவுபடுத்தப்பட்ட மருத்துவமனை திறப்பு விழா தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் நிதி, 135 கோடி ரூபாய் மதிப்பில், தாராபுரம் ரோட்டில், புதிய அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டும் பணி, இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. தரைத்தளம் முதல் நான்கு தளங்கள் பணி கடந்தாண்டு செப்., மாதம் முடிந்த நிலையில், ஐந்து மற்றும் ஆறாவது தளம் கட்டும் பணி, நடப்பாண்டு பொங்கலுக்கு முன்பாக நிறைவு பெற்றது.
ஒருபுறம் கட்டுமான பணி நடந்தாலும், மறுபுறம் பணி முடிந்த தளங்களில் பெயின்ட் பூசும் பணி, கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. அவை முடியும் நிலையில் உள்ளதால், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அலுவலர்கள், அதிகாரிகள் வளாகங்களை தனித்தனியே பிரித்து, தனியே காம்பவுண்ட் சுவர் கட்டும் பணியும் நடந்து வருகிறது.
அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை சுற்றி, பிரேத பரிசோதனை அறை எதிரே சுற்றுச்சுவர் கட்டும் பணி கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. அதற்கான அஸ்திவார பணி, மேற்கொள்ளும் பெரும்பாலான இடங்கள், பாறைகள் நிறைந்ததாக உள்ளது.
இதனால், சுவர் அமைக்கும் பணி இழுபறியாகியுள்ளது. இயந்திரங்களை கொண்டு பாறைகள் உடைத்தெடுக்கப்பட்டு வருகிறது. பாறை உடைத்தெடுத்து, அஸ்திவாரம் அமைப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது; பணிகளும் மந்தமாகி உள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
புதிய இடத்தில் கட்டுமான பணி என்றால், விரைந்து பணி மேற்கொள்ள முடியும். ஏற்கனவே இருந்த மருத்துவமனையை இடித்து விட்டு, அந்த இடத்தில் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டுவதால், ஒவ்வொரு பணியை கவனமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது.
சுற்றுச்சுவர் அஸ்திவாரத்துக்கு குழி தோண்டிய இடம், பாறைகள் நிறைந்ததாக உள்ளது. மிக அருகிலேயே மருத்துவமனை உள்ளதால், வெடி வைத்து அகற்ற முடியாது. பாதுகாப்பு காரணங்களால், பாறையை உடைத்து அகற்றி வருகிறோம். இன்னமும் ஒரு மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும். மார்ச் இறுதி அல்லது ஏப்., மாதம் மருத்துவமனை திறக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement