அவிநாசி:சாலைப்பாளையம் ரோட்டோரம் அடர்ந்து வளர்ந்துள்ள முட்புதர் களால், மக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
அவிநாசி சாலைப்பாளையம் வழியாக, சூளை சந்திப்பு சாலையில் காமராஜ் நகர், புளியங்காடு தோட்டம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் அதிகளவில் பயணிக்கின்றனர். ஆட்டையம்பாளையத்தில் இருந்து நகருக்குள் வராமல், சேவூர் சாலையில் உள்ள சூளைப் பகுதிக்கு எளிதாக வர முடியும் என்பதால், தினமும், ஏராளமானோர் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.
சாலையின் இருபுறமும், செடி - கொடிகள் அடர்ந்து வளர்ந்திருப்பதால், எதிர்புறம் வரும் வாகனங்கள் கூட, மக்களுக்கு சரிவர தெரிவதில்லை. இரவில், இவ்வழியாக பயணிக்கும் மக்கள், திருட்டு சம்பவம் ஏதேனும் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் பயணிக்கின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம், சாலையோரம் அடர்ந்து வளர்ந்துள்ள செடி, கொடி, புதர்களை அகற்ற வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Advertisement