ராமேஸ்வரம்,-ராமேஸ்வரம் கோயிலில் உள்ளூர் பக்தர்கள் தரிசிக்க முடியாதபடி தடை ஏற்படுத்திய தடுப்பு வேலிகளை ஆர்.டி.ஓ., ஆய்வு செய்து அகற்றினார்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, தரிசன வசதி ஏற்படுத்தாமல் கட்டண வசூலிப்பதையே நோக்கமாக கொண்டு கோயில் அதிகாரிகள் செயல்பட்டனர்.மேலும் தினமும் கோயிலுக்கு வரும் உள்ளூர் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாதபடி தடுப்பு வேலிகளை அமைத்து தடை ஏற்படுத்தினர்.
இதனை கண்டித்து ராமேஸ்வரம் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் ஜன.31ல் முழு கடையடைப்பு நடத்த தீர்மானித்தனர். இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது.
இதையடுத்து, நேற்று ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் எம்.எல்.ஏ., காதர்பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., கோபு, ராமேஸ்வரம் டி.எஸ்.பி., தனஞ்செயன், நகராட்சி தலைவர் நாசர்கான், துணை தலைவர் பிச்சை தட்சிணாமூர்த்தி முன்னிலையில் சமரச கூட்டம் நடந்தது.
இதில், கோயிலுக்குள்ஆன்மிக மரபு மீறி வைத்துள்ள தடுப்பு வேலிகளை அகற்றி பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் செய்வது குறித்து 10 நாட்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கலாம், என முடிவு செய்தனர்.
பின் அனைவரும் கோயிலுக்குள் சென்று மைய மண்டபம், காசி விஸ்வநாதர், தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி சன்னதி முன்புள்ள தடுப்பு வேலிகளை உடனடியாக அகற்றினர். இதை பக்தர்கள், உள்ளுர் மக்கள் வரவேற்றனர்.
இதையடுத்து ஜன.31ல் நடத்த இருந்த கடையடைப்பு போராட்டத்தை ஒத்தி வைத்தனர்.
Advertisement