திருப்பூர்:'அரசின் தவறான வகைப்படுத்துதல் காரணமாக, வக்பு வாரியத்திடம் சொந்த நிலங்களை ஹிந்து மக்கள் இழந்துள்ளனர்' என்று, ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.
அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
தமிழகத்தில், 7,452 வக்பு நிறுவனங்களுக்கு சொந்தமான, 53 ஆயிரத்து 834 சொத்துகள் உள்ளன. இச்சொத்துகளில் அதிகமானவை ஆக்கிரமிப்பில் உள்ளன அல்லது சட்டவிரோதமாக வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
வக்பு நிறுவனங்களின் வசம் உள்ள சில சொத்துகளின் பட்டாக்கள், மூன்றாம் நபர் பெயரில் உள்ளன. வக்பு சட்டம், 1995 ன் பிரிவு 51 (1ஏ)வை, பிரிவு 104 ஏ, உடன் சேர்ந்து பார்க்கும் போது, வக்பு சொத்தை விற்பது, அன்பளிப்பாக அளிப்பது அல்லது பரிமாற்றம் செய்வது, அடமானம் வைப்பது அல்லது பெயர் மாற்றம் செய்வது, அப்பரிவர்த்தனையின் தொடக்கத்திலிருந்தே செல்லத்தக்கது அல்ல.
வக்பு சட்டத்தின், 40ம் பிரிவின் படி, ஒரு சொத்து வக்பு சொத்தா, இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், வக்பு வாரியத்திற்கே உண்டு. மேலும், சொத்துகள் (சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும்) சட்டம், 1975 ன் படி, வக்பு சொத்துகள், பொது சொத்துகள் என்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.
பதிவு சட்டம், 1908ன் படி, வக்பு சொத்துகள் விற்பனையை பதிவு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. வக்பு வாரிய சொத்துகளை நிர்வகிக்கும் வக்பு போர்டு நிர்வாகிகள், முறைகேடான வகையில் விற்பனை செய்து விட்டு, சரியான ஆவணங்கள் இல்லாமல் வைத்துள்ளனர்.
இதனை சரிவர அறியாத தி.மு.க., அரசு, இஸ்லாமியர்களின் ஓட்டுக்களுக்காக, அவசர கதியில் வக்பு போர்டு நிலங்களை வகைப்படுத்துதல் மற்றும் அளவீடு செய்தல் என்ற நடைமுறையை செய்கிறேன் என்று, அரசுக்கு சொந்தமான மற்றும் தனியார் நிலங்களை வக்பு வாரியத்தினர் பெயரில் மாற்றம் செய்துள்ளனர்.
அரசின் தவறான வகைப்படுத்துதலின் விளைவாக, காலம் காலமாக இருந்து வரும் தன் சொந்த நிலத்தையே இழக்க கூடிய நிலைக்கு தற்போது மக்கள் ஆளாகியுள்ளனர். இந்தவாரியத்தின் கீழ் உள்ள இடங்களை பற்றிய முழு விபரம் பத்திரப்பதிவு துறையிடமே இல்லை என்பது வருந்துவதற்குரிய விஷயம்.
கோவை, திருப்பூர், திருச்சி, வேலுார் உட்பட பல மாவட்டங்களில் பல ஆயிரம் குடும்பங்கள் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நுாற்றுக்கணக்கான ஆண்டுகளாக அனுபவித்து வந்த சொத்துகளை, நிலங்களை, பத்திர பதிவுதுறை திடீரென்று வக்பு வாரிய சொத்துகள் என்று அறிவித்ததை, மக்கள் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.
இதுபோன்ற செயல்களை ஹிந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. முதலில் பத்திரப்பதிவு துறை இதைப்பற்றி முழுமையான தரவுகளை வெளியிட்டு, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
Advertisement