கோவை:கடன் தொகையை திருப்பி தராததால், ஆத்திரமடைந்த பெண், ஆட்டோவை தீ வைத்து கொளுத்திய சம்பவம், கோவையில் நடந்துள்ளது. பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.
கோவை சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 41. ஆட்டோ டிரைவர். இவர், நான்கு மாதங்களுக்கு முன், அதே பகுதியில் வசிக்கும் விஜி (எ) அந்தோணியம்மாள், 34, என்பவரிடம், 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.
அதில், 15 ஆயிரம் திருப்பி கொடுத்து விட்டார். மீதமுள்ள 10 ஆயிரம் ரூபாயை தரவில்லை. இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஜன., 26ம் தேதி இரவு 11:00 மணிக்கு, செந்தில் குமார், தன் ஆட்டோவை வீட்டு முன் நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு அவரது ஆட்டோ தீப்பற்றி எரிவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.
எழுந்து வந்து பார்த்தபோது ஆட்டோ தீயில் எரிந்து நாசமாகியிருந்தது. அதன் மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாய். முன் விரோதத்தில் தன் ஆட்டோவை தீ வைத்து எரித்து விட்டதாக, விஜி மீது செந்தில்குமார் புகார் அளித்தார். விசாரித்த ஆர்.எஸ்.புரம் எஸ்.ஐ., சுகுமாரன், விஜியை கைது செய்து சிறையில் அடைத்தார்.
Advertisement