தன்பாத்,- ஜார்க்கண்டில் நேற்று அதிகாலை மருத்துவமனை ஒன்றில் நடந்த தீ விபத்தில், இரண்டு டாக்டர்கள் உட்பட ஐந்து பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத்தின் பேங்க் மோர் பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றின் ஸ்டோர் ரூமில் நேற்று அதிகாலை 2:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆறு தீயணைப்பு வாகனங்கள், இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தன.
இந்த விபத்தில், மருத்துவமனை உரிமையாளர் பிரபல டாக்டர் விகாஸ் ஹஸ்ரா, அவர் மனைவி டாக்டர் பிரேமா, உறவினர் சோஹன் கமாரி, பணிப் பெண் தாரா தேவி உட்பட இறந்த நான்கு பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.
இறந்த மற்றொருவர் யாரென தெரியவில்லை. புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு ஐந்து பேரும் இறந்திருப்பதாகவும், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
டாக்டர் விகாஸ் தம்பதியின் உயிரிழப்பிற்கு, மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், சுகாதார அமைச்சர் பன்னா குப்தா உள்ளிட்டோர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Advertisement