புதுடில்லி,-புதுடில்லியில் குடித்து விட்டு கார் ஓட்டிச் சென்ற மாணவர்கள், ஸ்கூட்டரில் வந்தவர் மீது மோதி, அவரை 350 மீட்டர் இழுத்துச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. இதில் ஸ்கூட்டரில் வந்தவர் பரிதாபமாக பலியானார்.
சமீபகாலமாக புதுடில்லியில் கோர விபத்துகள் அரங்கேறி வருகின்றன. புத்தாண்டு அன்று இரவு, இரு சக்கர வாகனத்தில் சென்ற அஞ்சலி சிங் என்ற பெண் மீது, காரை மோதி, அவரை 12 கி.மீ., இழுத்துச் சென்றது தொடர்பாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விபத்தில் அஞ்சலி சிங் பலியானார்.
தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் அரங்கேறி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு, புதுடில்லியின் பெரேனா சவுக் என்ற பகுதியில், ஸ்கூட்டரில் ஒருவர் சென்றார்.
அப்போது ஒரு கார், அவர் மீது மோதியது. அதில் அவர், காரின் முன் பகுதியில் விழுந்தார். ஆனாலும் அந்த கார் நிற்காமல் 350 மீட்டர் துாரம் வரை சென்றது. இதில் இழுத்துச் செல்லப்பட்ட அந்த நபர் பரிதாபமாக இறந்தார்.
காரில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தப்பி ஓடிய ஐந்து பேரை கைது செய்தனர்.
இவர்கள் அனைவருமே பிளஸ் 2 மாணவர்கள். குடிபோதையில் இருந்ததால், என்ன நடக்கிறது என தெரியாமலேயே, காரை மோதி இந்த விபத்தை இவர்கள் ஏற்படுத்தியது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement