காஞ்சிபுரம் காஞ்சிபுரம் தாட்டித்தோப்பு பகுதிக்கு செல்லும் வழியில் வேகவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தரைப்பாலம் உடைந்து விட்டது.
பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தாட்டித்தோப்பு பகுதிக்கு செல்லும் வழியில் வேகவதி ஆற்றின் குறுக்கே இரு இடங்களில் தரைப்பாலம் அமைந்துள்ளது.
அந்த பாலம் கடந்த ஆண்டு வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது உடைப்பு ஏற்பட்டது. பின் தற்காலிகமாக மணல் மூட்டை அடுக்கி போக்குவரத்துக்கு சீரமைக்கப்பட்டது.
அதேபோல, இந்த ஆண்டும் பருவ மழையின் போது அங்குள்ள இரு தரைப்பாலங்களிலும் உடைப்பு ஏற்பட்டது.
அதில் முருகன் நெசவாளர் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் மட்டும் மழையின் போது அவசர அவசரமாக போக்குவரத்து வசதிக்காக சீரமைக்கப்பட்டது.
நிரந்தரமாக சீரமைப்பதற்கு, அரசு நிதிக்காக காத்திருப்பதாக பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதேபோல, அங்குள்ள மற்றொரு தரைப்பாலமும் உடைப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.
ஒரு சிலர் இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் உடைந்த தரைப்பாலம் வழியாக செல்கின்றனர்.
அடுத்த பருவ மழைக்குள் உடைந்த தரைப்பாலத்தை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.