பில்வாரா-''சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் அதிகாரம் அளிப்பதற்காக, தே.ஜ., கூட்டணி அரசு கடுமையாக உழைத்து வருகிறது,'' என பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ராஜஸ்தானில் வசிக்கும் குர்ஜார் சமூக மக்களின் கடவுளாக போற்றப்படும், தேவநாராயணனின் அவதார திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
இதையொட்டி, இங்குள்ள பில்வாரா மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:
உலகம் முழுதும் வசிக்கும் மக்கள், தற்போது இந்தியாவை புதிய நம்பிக்கையுடன் உற்று நோக்குகின்றனர். பொருளாதாரத்தில் நாம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறோம்.
அன்றாட தேவைகளுக்காக மற்ற நாடுகளை சார்ந்திருந்த போக்கு இப்போது மாறியுள்ளது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், நமக்கு தேவையானவற்றை நாமே தயாரிக்கிறோம்.
நம் நாட்டின் சுதந்திர போராட்டத்தில் குர்ஜார் சமூக மக்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
துரதிர்ஷ்டவசமாக நம் நாட்டின் வரலாற்றில் இந்த சமூக மக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.
இந்த விஷயத்தில் முந்தைய அரசுகள் செய்த தவறுகளை இப்போது திருத்தி வருகிறோம். இந்தியாவின் கலாசாரத்தை சீர்குலைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை வெற்றி பெறவில்லை.
இந்தியா என்பது ஒரு நிலப்பரப்பு மட்டுமல்ல; கலாசாரம், நாகரிகம், சமூக நல்லிணக்கம் ஆகியவற்றின் வெளிப்பாடும் கூட.
சமூகத்தில் பல ஆண்டு களாக புறக்கணிக்கப்பட்டு வந்த, வறுமையில் வாடிய மக்களுக்கு அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, கடந்த எட்டு ஆண்டுகளாக தே.ஜ., கூட்டணி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அனைத்து தரப்பினருக்கும் அதிகாரம் கிடைக்கச் செய்வதே இந்த அரசின் நோக்கம்.
சமூகத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே, இந்த அரசின் தாரக மந்திரம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement