காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அருகே வெளி மாநிலத்திற்கு கடத்த இருந்த 11,440 கிலோ ரேஷன் அரிசியை காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டை ரோட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள தனியார் ரைஸ் மில்லில் இருந்து லாரியில் ரேஷன் அரிசி கடத்த இருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் காவல் ஆய்வாளர் முகேஷ்ராவ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
புறப்பட தயாராக இருந்த லாரியை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 26 கிலோ கொண்ட 440 அரிசி மூட்டைகள், அதாவது 11 ஆயிரத்து 440 கிலோ அரிசி லாரியில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
விசாரணையின் போது கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்ல தயாராக இருந்ததாகவும், சுற்றுப்பகுதி வீடுகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி ரைஸ் மில்லில் கொடுத்து 'பாலிஷ்' செய்து மூட்டை கட்டி அதிக விலைக்கு விற்பனை செய்ய இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரிசி கடத்தலில் சம்மந்தப்பட்ட ஒலிமுகமதுபேட்டை பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி, 32. உதயகுமார், 37. ராஜதுரை, 24 ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.
அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Advertisement