குவாலியர்,-மத்திய பிரதேசத்தில் பயிற்சியின் போது இரண்டு போர் விமானங்கள் விபத்தில் சிக்கியதில், ஒரு பைலட் பலியானார்; இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் குவாலியர் அருகே மொரேனா என்ற இடத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமான தளம் உள்ளது. இங்கிருந்து, 'சுகோய் எஸ்யு - 30' மற்றும் 'மிராஜ் - 2000' ஆகிய இரண்டு விமானங்கள் நேற்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டன.
அப்போது எதிர்பாராத விதமாக, இரண்டு விமானங்களும் நடுவானில் மோதிக்கொண்டதாகவும், இதில் பலத்த சத்தத்துடன் விமானத்தின் பாகங்கள் உடைந்து, தீப்பிடித்து சிதறி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில், மிராஜ் - 2000 விமானத்தின் பைலட் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். சுகோய் விமானத்தில் இருந்த இரண்டு பைலட்டுகளும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து இந்திய விமானப் படை சார்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து குறித்து விமானப் படை அதிகாரிகளிடம், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் போன் வாயிலாக விசாரித்து விபரங்களை கேட்டறிந்தார்.
இதற்கிடையே ம.பி., மாநில எல்லையில் உள்ள ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலும், விமானத்தில் உடைந்த பாகங்கள் விழுந்துள்ளன.
இதனால் இரண்டு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதா அல்லது தனித்தனியாக விபத்தில் சிக்கியதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.