பாலியா,-குடியரசு தினத்தன்று, குஜராத்தின் ஆமதாபாதில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்த போவதாக மிரட்டல் விடுத்த நபரை, உத்தர பிரதேசத்தில் வைத்து போலீசார் நேற்று கைது செய்தனர்.
குஜராத்தின் ஆமதாபாத் நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சமீபத்தில், மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. இதில், குடியரசுத் தினத்தன்று ஆமதாபாதில் உள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து விசாரணை நடத்திய குஜராத் போலீசார், இந்த கடிதத்தை நான்கு பேர் எழுதி அனுப்பியதை கண்டறிந்தனர். இது தொடர்பாக மூன்று பேரை ஆமதாபாத்தில் கைது செய்த நிலையில், மற்றொரு நபர், உத்தர பிரதேசத்தின் பாலியா பகுதியைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் என்பது தெரியவந்தது.
மிரட்டல் கடிதம் எழுதிய முக்கிய நபர் இவர் தான் என்பதால், அவரைப் பிடிக்க குஜராத் போலீசார், உத்தர பிரதேச மாநிலத்துக்கு விரைந்தனர். அம்மாநில போலீசாரின் உதவியுடன் ஓம் பிரகாஷை கைது செய்து, குஜராத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement