சென்னை, :தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தாம்பரம் ரயில் முனையத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், இங்கு வந்து செல்லும் தினசரி பயணியரின் எண்ணிக்கை 2.30 லட்சத்தை தாண்டியுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் படிப்படியாக அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேம்படுத்த தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள்கூறியதாவது:
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில்களின் இயக்கத்தை படிப்படியாக அதிகரித்து வருகிறோம்.
இதனால், பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வரும் ஆண்டுகளில் பயணியரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
எனவே, பயணியருக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, நடைமேடைகள் விரிவாக்கம், கூடுதலாக நடைமேடை அமைப்பது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இப்பணிகளை, 20 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான, நிதியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்க, கோரிக்கை விடுத்துள்ளோம்.
இந்நிலையில், தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து ரயில் நிலையம் வழியாக, கிழக்கு தாம்பரம் செல்லும் வகையில், புது நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.
நடைமேம்பாலங்களை இணைக்க, அனைத்து நடைமேடைகளிலும் 'எஸ்கலேட்டர்'களை அமைக்க உள்ளோம்.
இதேபோல, மின் துாக்கிகள், சி.சி.டி.வி., கேமராக்கள் அமைக்கும் பணிகளை படிப்படியாக மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Advertisement