வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: சில தினங்களுக்கு முன், ஒரு அமைச்சர், தொண்டர்கள் மீது கற்களை வீசி எறிந்தார். தற்போது, மற்றொரு அமைச்சர் நேரு, மக்களிடம் கரடுமுரடாக நடந்திருக்கிறார். இவை அனைத்தும் தினமும் தொடர்கின்றன. தி.மு.க., அமைச்சர்கள், மக்களை அடிப்பதாக சபதம் எடுத்தது போல தெரிகிறது.
![]()
|
டவுட் தனபாலு: 'என் துாக்கத்தை கெடுக்கிறாங்க' என முதல்வர் புலம்பிய பிறகும்,அமைச்சர்களின் அடாவடிதொடர்கிறது என்றால், முதல்வரை அவங்க மதிப்பதாக தெரியவில்லையே... இதுபோன்ற செயலில் ஈடுபடும் ஒரு அமைச்சரை, தடாலடியாக பதவி நீக்கம் செய்தால், மற்ற அமைச்சர்களும் அடக்கி வாசிப்பர்... ஆனா, அந்த துணிச்சல் முதல்வருக்கு இருக்கா என்பது தான், 'டவுட்!'
lll
பத்திரிகை செய்தி: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.ம.மு.க., வேட்பாளராக, ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலர் சிவபிரசாந்த் அறிவிக்கப்பட்டு உள்ளார். தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக, 294 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
டவுட் தனபாலு: அ.தி.மு.க.,வை முந்திக்கிட்டு வேட்பாளரை அறிவிச்சிட்டாரே... ஆனா, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள்னு, 294 பேரை நியமிச்சிருக்காரே... அங்க தான், 'டவுட்' வருது... இவ்வளவு பேர், அந்தக் கட்சியில இருக்காங்களா அல்லது வாடகைக்கு வளைச்சிருக்காரா?
lll
ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த பீஹார் முதல்வர் நிதிஷ் குமார்: வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக பலமானகூட்டணி அமைக்க, ஒரே கருத்துடைய கட்சிகளுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளேன். விரைவில், அதற்கான நடவடிக்கை துவங்கும்.
டவுட் தனபாலு: மேற்கு வங்கத்துல மம்தா... தெலுங்கானாவுல சந்திரசேகர ராவ்...பீஹார்ல நீங்கன்னு, பா.ஜ.,வுக்கு எதிரா, நவக்கிரகங்கள் மாதிரி ஆளாளுக்கு ஒரு திசையில பயணிக்கிறீங்க... நீங்க மூணு பேரும் ஒரே நேர்கோட்டுல வரவும் மாட்டீங்க; பா.ஜ.,வுக்கு எதிராக பலமான கூட்டணி அமையவும்அமையாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
காஷ்மீரில் செயல்படும், தேசிய மாநாட்டு கட்சி தலைவர்ஒமர் அப்துல்லா: பாகிஸ்தானுக்கு எதிரான, 'சர்ஜிகல்ஸ்டிரைக்' பற்றி காங்., மூத்த தலைவர் திக்விஜய் சிங் எழுப்பிய சந்தேகம் குறித்து, நான் எதுவும் கூற விரும்பவில்லை; இது, காங்கிரசின் உட்கட்சி விவகாரம்.
டவுட் தனபாலு: எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில,பா.ஜ.,வுக்கு எதிரான நீங்க, இப்ப காங்கிரஸ் உடன் கொஞ்சி குலாவிட்டு இருக்கீங்க... அதான், திக்விஜய் சிங் கருத்தை கண்டிக்காம, நாசுக்கா நழுவுறீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், 'கண்ணுக்கு எட்டிய துாரம் எதிரிகளே இல்லை' என, சிலர் கூறி வருகின்றனர். நாம் பெறும் மிகப் பெரிய வெற்றியால், கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, நம் கரை வேட்டிகள் இருப்பதை, அவர்களுக்கு உணர்த்த வேண்டும். எப்படியாவது, அ.தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என, சிலர் விரும்புகின்றனர். அ.தி.மு.க., தோற்ற வரலாறே கிடையாது. நம்மால் மட்டுமே, நம்மை தோற்கடிக்க முடியும்.
![]()
|
டவுட் தனபாலு: நீங்கள் சொல்வது நுாற்றுக்கு நுாறு உண்மை... உங்களை தோற்கடிக்க, வெளியில இருந்து யாரும் கிளம்பி வரணுமா என்ன... சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் மாதிரியான அங்காளி, பங்காளிகளே உங்களை, 'பங்கம்' பண்ணிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
பத்திரிகை செய்தி: பால் கொள்முதல் விலையை, தனியார் நிறுவனங்கள் அதிகரித்துள்ளதால், ஆவின் பால் கொள்முதல் குறைந்து வருகிறது. இதையடுத்து, பால் கொள்முதலை அதிகரிக்கும் வகையில், குறும்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் ஆவின் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. 'ஆவின் என்றும் நமக்காக; நாமும் இருப்போம் அதற்காக' என்ற தலைப்பில், இந்தக் குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
டவுட் தனபாலு: 'ஏசி' அறையில உட்கார்ந்து பல் குத்திட்டு இருக்கிற ஆவின் அதிகாரிகள், களத்துல இறங்கி, கீழ்மட்ட அதிகாரிகள், ஊழியர்களை முடுக்கி விட்டா, கொள்முதல் தானா உயரப் போகுது... யாரோ ஒருத்தர் சினிமா கனவுல தோற்று போய், தப்பி தவறி ஆவின் அதிகாரியாகி, இந்த மாதிரி எல்லாம் குண்டக்க மண்டக்க யோசிக்கிறாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement