பெங்களூரு,-கர்நாடக சட்டசபை பதவிக் காலம் மூன்று மாதங்கள் உள்ள நிலையில், மே இரண்டாம் வாரத்தில் தேர்தலை நடத்த, ஆயத்த பணிகளை கமிஷன் முடுக்கி விட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் இந்தாண்டு மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் புதிய சட்டசபை அமைக்க வேண்டும்.
கடந்த 2018ம் ஆண்டு மே 12ம் தேதி ஓட்டுப் பதிவு நடந்தது. இம்முறையும் அதே காலகட்டத்தில் நிகழலாம் என தெரிகிறது.
மூன்று லட்சம் பேர்
இதன் அடிப்படையில் தேர்தல் கமிஷன், தேர்தல் ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. தேர்தல் பணிக்கு மூன்று லட்சம் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
பெரும்பாலும் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
![]()
|
மார்ச் 9ம் தேதி முதல் 29ம் தேதி வரை இரண்டாம் ஆண்டு பி.யு.சி., தேர்வு நடக்கிறது.
எனவே, ஏப்ரல் 15க்கு பின்னரே தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக, தேர்தல் கமிஷன் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவின் 224 சட்டசபை தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியலை, தேர்தல் கமிஷன் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
இருப்பினும், இறுதி வாக்காளர் பட்டியலை மீண்டும் சரிபார்த்து, பிழைகள் இருந்தால் திருத்திக் கொள்ளுமாறு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கும் வாக்காளர் பட்டியல் வழங்கப்படவுள்ளன.
முதல் கட்ட சோதனை
இதைத் தொடர்ந்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் எப்.எல்.சி., என்ற முதல் கட்ட சோதனை நடத்தப்படும். அப்போது, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையிலும்இயந்திரங்கள் சரிபார்க்கப்படும்.
இந்த இயந்திரங்கள், கதக், தார்வாட், உத்தர கன்னடா, ஹாவேரி மாவட்டங்களில் சரி பார்ப்பு பணிகள்முடிக்கப்பட்டுள்ளன.
பல்லாரி, விஜயநகரா, சித்ரதுர்கா, தாவணகரே, உடுப்பி, ஷிவமொகா மாவட்டங்களில் பணிகள் நடந்து வருகின்றன. பிப்ரவரி மாத இறுதிக்குள் இப்பணியை முடிக்க தேர்தல் கமிஷன் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இம்முறை, 60 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஓட்டுச்சாவடிக்கு குறைந்தபட்சம் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இவர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
வாக்காளர் பட்டியல் திருத்தம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட உள்ளூர் நிகழ்வுகளை கண்காணிக்க, மாவட்டத்துக்கு 10 முதல் 15 பார்வையாளர்கள், கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் தொடர்ந்து கூட்டம் நடத்தி, தகவல்களை அதிகாரிகள் பெற்றுவருகின்றனர்.
தேர்தலுக்கான ஏற்பாடுகள் துவங்கி விட்டன. கடந்த முறை, மே 12ம் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. தற்போதைய சட்டசபையின் பதவிக் காலம், மே 24ம் தேதி முடிவடைகிறது என்பது தேர்தல் கமிஷனுக்கு தெரியும்.
மனோஜ் குமார் மீனா,
மாநில தலைமை தேர்தல் அதிகாரி