கடலுார்,-''சேது சமுத்திர திட்டம் வேண்டுமா, வேண்டாமா என்பதை நிபுணர் குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும்,'' என, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் தேசிய செயலருமான ஹெச்.ராஜா கூறினார்.
கடலுாரில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில், சனாதன ஹிந்து தர்ம எழுச்சி மாநாடு நேற்று துவங்கியது.
மாநாட்டில் பங்கேற்ற ஹெச்.ராஜா அளித்த பேட்டி:
'தமிழைத் தேடி' என்ற பெயரில் யாத்திரை செல்ல, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். தமிழைத் தேடி யாத்திரை என்று சொன்னால், தமிழ் தொலைந்து விட்டது என்று தானே அர்த்தம். அதற்கு முன், தமிழை தொலைத்தது யார் என்பதை அறிய வேண்டும். திராவிடத்தால் தமிழ் அழிந்தது.
தமிழை எங்கே தேடினால் கிடைக்கும் என்ற விபரத்தையும் அவரிடம் சொல்ல உள்ளேன்.
தி.மு.க.,வினர் சேது சமுத்திர திட்டத்தை பற்றி பேசி இருக்கின்றனர். இதற்கு, 1 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்கின்றனர். தமிழகத்திற்கு இதனால் என்ன மிச்சமாகும் என்பதை ஆராய வேண்டும்.
முதலில், நிபுணர் குழு அமைத்து, சேது சமுத்திர திட்டம் வரலாமா, வேண்டாமா என, முடிவெடுங்கள். இந்த திட்டத்தால், ராமர் பாலத்திற்கு எந்த விதத்திலும் பாதிப்பு வரக்கூடாது என்பது தான் எங்கள் கருத்து.
இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.