''நான் மதுரை செல்லுாருகாரன். சங்கிலி முருகன் இருக்கிறாருல, அவரு எனக்கு அண்ணன் மாதிரி. அவர் தயாரிச்ச நாடோடி பாட்டுக்காரன், கும்பக்கரை தங்கையா படங்கள் எல்லாம் மதுரையை சுத்திதான் எடுத்தாங்க. அப்ப அவரு என்னை கூப்பிட்டு, 'நீதான் எல்லா ஏற்பாடுகளையும் பார்த்துக்கோணும்னு' சொல்லிப்புட்டாரு. நடிகர்கள் வந்து போறதுக்கு டிக்கெட் புக் செய்றதுலிருந்து எல்லா வேலையும் பார்த்தேன். திடுதிப்புனு என்னை ஒரு சீனுல நடிக்க வச்சுடுவாப்பல. இப்படிதான் தம்பி ஆரம்பிச்சது நம்ம சினிமா கதை. ஜெயம் ரவி நடிச்ச சகலகலா வல்லவன், ரஜினிமுருகனு இதுவரை 40 படங்களுக்கும் மேல நடிச்சாச்சு. இப்ப ஹிப்பாப் தமிழா ஆதி நடிக்கும் வீரன் படத்துல நடிச்சிட்டு இருக்கேன்'' என்று 'டயலாக்' மாதிரி பேசி முடித்தார்.
'அதெல்லாம் சரி ஐயா. எப்படி சினிமா ஆர்வம் வந்துச்சு. அதை சொல்லுங்க'
''நான் படிச்சது அமெரிக்கன் கல்லுாரி பள்ளி. அப்பயே ஆண்டு விழாவுல நடிப்பேன். பிறவு அமெரிக்கன் காலேஜ்ல படிச்சேன். எனக்கு தமிழாசிரியர் நம்ம சாலமன் பாப்பையா. அங்கேயும் விழாவுல நடிச்சேன். வெளியே வந்து மேடை, சபா நாடகங்களில் நடிச்சேன். இப்பவும் நடிச்சிட்டு இருக்கேன். 'டிவி' சீரியலும் நடிக்கிறேன். நானா வாய்ப்பு கேட்கிறது இல்லை. வந்த வாய்ப்பை விடுறது இல்ல. இப்ப மூன்றாவது தலைமுறை நடிகர்களுடனும் நடிச்சிட்டு வர்றேன்'' என மீசையை தடவினார்.
'இந்த மீசைதான் உங்களுக்கு அடையாளமா'
''சரியா கேட்டுபுட்டீக. ஒரு டைரக்டரு தம்பிய சும்மா சந்திக்க போனேன். அப்ப என் மீசையை பார்த்தவரு, 'அண்ணே, இதையே 'மெயின்ட்டெய்ன்' பண்ணுங்க. சான்ஸ் கிடைக்கும்னு' சொன்னாரு. அப்பதிலிருந்து இப்போ வரைக்கும் நம்ம மீசைதான் வாய்ப்பை தேடி கொடுத்துட்டு இருக்கு. தம்பி எனக்கு ஒரு ஆசை இருக்கு. மதுரைக்காரங்க சினிமாவுல உச்சத்துல இருக்காங்க. அதுமாதிரி நாமளும் வரணும்னு இந்த வயசிலேயும் போராடிட்டு இருக்கேன்'' என கம்பீரத்துடன் கூறினார் மோகன். அப்போது அவரது மீசையும் கம்பீரமாக நம்மை பார்த்தது.
இவரை வாழ்த்த 90805 76919