பார்வையில் துணிவு, பழக்கத்தில் பணிவு, கலைமகளின் வாரிசு... என குறும்படங்கள் நடிப்பு, பின்னணி குரல் கொடுப்பு, நிகழ்ச்சி தொகுப்பு என சகலகலா நாயகியாக வலம் வந்து கலக்குகிறார் மதுரை ஸ்ரீகலா...
பன்முக திறமை பயணம் குறித்து ஸ்ரீகலா கூறுகிறார்...
''பன்முக கலைஞராகும் முன் தனியார் நிறுவன விளம்பர பிரிவில் பணியாற்றினேன். அங்கு பேசும் கலையை கற்று, பின் கல்லுாரி ஒன்றில் பணியாற்றினேன். அங்கும் பல தனித் திறமைகளை கற்றேன். இந்த வாழ்க்கை கல்வி, அனுபவங்களை மூலதனமாக கொண்டு குரல் கலைஞராக உருவானேன்.
தற்போது ஆன்மிகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு விழா மேடைகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறேன். அதோடு போட்டிகளின் நடுவராகவும் பங்கேற்று நியாயமான தீர்ப்புகளை வழங்குகிறேன்.
விளம்பர படங்களுக்கு வாய்ஸ் ஓவர் கொடுப்பது, நடிப்பது உட்பட குறும்படங்களுக்கு டப்பிங் பேசுகிறேன். அதன் மூலம் 'பூப்பறிச்சான் காளி', 'ஊரான் பிள்ளை', 'லாஸ்ட் மினிட்' குறும்படங்களில் நடித்துள்ளேன். சினிமா வாய்ப்புகள் வருகிறது... ஆனால், சரியான கதைக்களத்திற்காக காத்திருக்கிறேன்.
பிரபல பிராண்ட் பொருட்களை புரமோட் செய்யும் இன்புளூயன்சராகவும் கால்பதித்து வெற்றியை நோக்கி பயணிக்கிறேன். தொழிலில் பிஸியாக இருக்கும் தொழில்முனைவோர் தங்களுக்கான 'பிஸினஸ் மீட்டிங்'கில் பங்கேற்க நேரம் இருக்காது. அவர்களுக்கு பதில் நான் பங்கேற்று, அதில் பகிரும் தகவல்களை சேகரித்து வந்து அவர்களுக்கு தெரிவிக்கிறேன். இது ஒரு புதுமை முயற்சி.
என் திறமைகளை பாராட்டி சர்வதேச பல்கலை ஒன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. புதுமைப் பெண், பெண் சாதனையாளர் போன்ற விருதுகளும் வென்றுள்ளேன். தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்காக 'வாய்ஸ் ஓவர்' கூட செய்துள்ளேன். நம் பண்பாடு, பாரம்பரியத்தை உலகறிய செய்வதே என் லட்சியம். சமூகத்தை காப்பதிலும் என் பங்கு இருக்கும்'' என்றார்.