வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
/
மதுரை: எனது தொகுதியில் ஜி.எஸ்.டி., ரோட்டில் இருந்த சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என மூன்று தெய்வங்களின் கோயில்களையும் இடித்தேன். கோயில்களை இடித்தாலும் ஓட்டு எப்படி வரவைக்கணும் என்று தெரியும்'' என மதுரையில் திராவிடர் கழகம் சார்பில் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடந்த மாநாட்டில் தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு பேசினார்.
அவர் பேசியதாவது: சேது சமுத்திர திட்டத்தால் தமிழ்நாடு வளர்ச்சியை பெற்றிருக்கும். 5 ஆண்டுகளுக்கு முன்னரே திட்டத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும்.ஆதாம் பாலம் வழியாகவே சேது சமுத்திர திட்டம் கொண்டு வர வேண்டும் என பா.ஜ., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.ராமர் பாலம் என்பது கட்டுக்கதை; மனிதனால் கட்டப்பட்ட கட்டுமானமே இல்லை என வரலாற்று அறிஞர்கள் கூறிவிட்டனர்.
சேது கால்வாய் திட்டத்திற்கு 6 மாவட்டங்களில் 2 ஆண்டுகள் கருத்து கேட்ட போது பா.ஜ., அமைதியாக இருந்தது. சேது சமுத்திர திட்டம் பல கி.மீ., தொலைவிற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இன்னும் 23 கி.மீ., தொலைவு முடிக்கப்பட வேண்டும். 81 இடங்களில் துளையிட்டு பரிசோதனை செய்யும் போது ராமர் பாலம் சேதமடையவில்லையா. தமிழக மக்களுக்கு பா.ஜ., துரோகம் செய்கிறது.எனது தொகுதியில் ஜி.எஸ்.டி., ரோட்டில் இருந்த சரஸ்வதி, லட்சுமி, பார்வதி என மூன்று தெய்வங்களின் கோயில்களையும் இடித்தேன். ஓட்டு வராது எனத்தெரியும். ஓட்டு எப்படி வரவைக்கணும் என்று தெரியும். கங்கையிலும், காவிரியிலும், கொள்ளிடத்திலும் வெடிவைத்து தகர்த்து பாலம் கட்டினேன். கடவுள் என்னை ஒன்றும் செய்யவில்லையே.ராமர் பாலம் விவகாரத்தில் நாசா வெளியிட்ட புகைப்படம் உண்மை. அதன் கருத்து உண்மைக்கு புறம்பான பொய், சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அமைதியாக இருந்து விட்டேன்.
பாரம்பரிய இடங்களை பாதுகாக்கும் பா.ஜ., அரசு ராமர் பாலத்தை ஏன் வேலியிட்டு பாதுகாக்கவில்லை.
ராமர் பாலம் உள்ளது என்பதை மக்கள் நம்பி கொண்டிருக்கின்றனர். இதற்கு எதிராக புரட்சி வெடித்து இருக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
கையை வெட்டுவேன்
''சேது சமுத்திர திட்டத்தால் ஆண்டுக்கு ரூ.700 கோடி நமக்கு லாபம் வரும். இந்தியாவுக்கு வரும் 70 சதவீத கப்பல்கள் சேது சமுத்திர திட்டத்தால் வந்து செல்லும். யாராவது தி.க. தலைவர் வீரமணி மீது கை வைக்க முயன்றால் நான் கையை வெட்டுவேன். அது தான் நியாயம்'' என மேடையில் பகிரங்கமாகவே பாலு எச்சரித்தார்.சமீபகாலமாக தி.மு.க., அமைச்சர்களின் செயல்களும், பேச்சுகளும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் பாலுவும் அந்த 'லிஸ்ட்'டில் சேர்ந்துள்ளார்.
Advertisement