Departure of Malayappa Swami in 7 vehicles at Tirumala | திருமலையில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி புறப்பாடு| Dinamalar

திருமலையில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி புறப்பாடு

Updated : ஜன 29, 2023 | Added : ஜன 29, 2023 | கருத்துகள் (1) | |
திருப்பதி--திருமலையில் ரத சப்தமியை முன்னிட்டு, ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். திருமலையில் ஆண்டுதோறும் சூரியனின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் ரத சப்தமியை தேவஸ்தானம் வெகு விமரிசையாக நடத்தி வருகிறது. அன்றைய நாளில், ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி, ஏழு வாகனங்களில் மாடவீதியில் எழுந்தருளி சேவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பதி--திருமலையில் ரத சப்தமியை முன்னிட்டு, ஏழு வாகனங்களில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.



latest tamil news


திருமலையில் ஆண்டுதோறும் சூரியனின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் ரத சப்தமியை தேவஸ்தானம் வெகு விமரிசையாக நடத்தி வருகிறது.

அன்றைய நாளில், ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி, ஏழு வாகனங்களில் மாடவீதியில் எழுந்தருளி சேவை சாதிப்பது வழக்கம்.

இதன்படி நேற்று சூரிய ஜெயந்தியான ரத சப்தமி உற்சவம் திருமலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.


சூரிய பிரபை



உலகிற்கு ஒளி கொடுக்கும் கடவுளான சூரியனை வணங்கும் நாளாக கருதப்படுவது ரத சப்தமி. இதையடுத்து, திருமலையில் நேற்று அதிகாலை, முதல் வாகன சேவையாக சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது.

மலையப்ப சுவாமி செந்நிற மலர்கள் சூடி, சூரிய நாராயணராக தங்க சூரிய பிரபை வாகனத்தில் அதிகாலை 4:30 மணிக்கு மாடவீதியில் எழுந்தருளினார்.

வாகன சேவை கிழக்கு மாடவீதியை அடைந்த போது, முதல் சூரிய கிரணங்கள் அவர் மேல் விழுந்தன. அப்போது அவருக்கு முதல் கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி அளிக்கப்பட்டது.


சின்ன சேஷ வாகனம்



வாகன சேவையில் இரண்டாவதாக காலை 9:00 மணி முதல், 10:00 மணி வரை சின்ன சேஷ வாகன சேவை நடைபெற்றது. இதில் வைகுண்ட நாதனாக எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு கற்பூர ஆரத்தி அளித்து பக்தர்கள் வணங்கினர்.


கருட வாகனம்



மூன்றாவது வாகன சேவையாக காலை 11:00 மணி முதல், 12:00 மணிவரை கருட சேவை நடைபெற்றது. மகாவிஷ்ணுவை தன் முதுகில் சுமக்கும் பாக்கியம் பெற்றவர் கருடன்.

அதனால் கருட வாகனத்தில் எழுந்தருளும் மலையப்ப சுவாமியை தரிசித்தால், நாம் இம்மையிலும், மறுமையிலும் செய்த பாவங்கள் அனைத்தும் அகலும். இந்த வாகன சேவையை காண பக்தர்கள் மாடவீதியில் குவிந்தனர்.


அனுமந்த வாகனம்



பெரிய திருவடியாக மகா விஷ்ணுவை முதுகில் சுமக்கும் கருடன் போற்றப்படும் நிலையில், சிறிய திருவடியாக ராமபிரானை நெஞ்சில் சுமக்கும் அனுமன் போற்றப்படுகிறார்.

எனவே, கருட வாகன சேவை முடிந்த பின், அனுமந்த வாகன சேவை மதியம் 1:00 மணி முதல், 2:00 மணி வரை நடைபெற்றது.


தீர்த்தவாரி



அனைத்து கோவில்களிலும் உள்ள சிலைகளின் சக்தி, அதன் சக்கரத்தை மையப்படுத்தி அமைந்துள்ளது. எனவே, சிலைகளுக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும், அதன் சக்கரங்களுக்கும் செய்யப்படுகின்றன.

விஷ்ணுவின் சக்கரமாக கருதப்படும் சக்கரத்தாழ்வாருக்கு ஒவ்வொரு உற்சவத்தின் நிறைவின் போதும் வழிபாடு நடத்தப்படுகிறது.

இதன்படி, மதியம் 2:00 மணிமுதல், 3:00 மணிவரை சக்கரத்தாழ்வாருக்கு திருமலையில் உள்ள திருக்குளக்கரையில் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர்.


latest tamil news




கல்பவிருட்ச வாகனம்



ஐந்தாவது வாகன சேவையாக, மாலை 4:00 மணி முதல், 5:00 மணிவரை கல்பவிருட்ச வாகன சேவை நடைபெற்றது.

இதில், ஸ்ரீதேவி - பூதேவி நாச்சியார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். பக்தர்கள் தங்கள் மனதில் நினைப்பதை, நினைத்த மாத்திரத்தில் அளிக்கும் பெயர் பெற்றது கல்பவிருட்ச வாகன சேவை.


சர்வபூபால வாகனம்



ரத சப்தமி அன்று, ஆறாவதாக சர்வபூபால வாகனத்தில், மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளி சேவை சாதித்தார். அவருக்கு பக்தர்கள் கற்கண்டு, பழங்கள் நெய்வேத்தியம் செய்து, கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர்.


சந்திர பிரபை



அதிகாலை செங்கிரணங்களால் ஒளி கொடுக்கும் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, இரவில் குளிர் கிரணங்களால் குளிர்ச்சியூட்டும் சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளினார். ரதசப்தமி நிறைவு வாகன சேவையாக சந்திர பிரபை வாகன சேவை நடைபெற்றது.

திருமலையில் வாகன சேவைகளை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் திரண்டனர்.

நாள் முழுதும் ஒரே இடத்தில் அமர்ந்து வாகன சேவையை தரிசித்த பக்தர்களுக்காக தேவஸ்தானம், 24 மணிநேரமும் குடிநீர், உணவு, மோர், பால், காபி, டீ புளியோதரை, சாம்பார் சாதம், சிற்றுண்டி ஆகியவற்றை வழங்கியது.

மேலும் திருமலையில் உள்ள அன்னதான கூடத்திலும் 24 மணிநேரமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ரத சப்தமியை முன்னிட்டு திருமலையில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் பக்தர்களின்றி தனிமையில் நடத்தப்பட்டன.

மேலும் ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபலங்கார சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X