சென்னை-இடைத்தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்களாக, 117 பேரை பழனிசாமி நியமித்த நிலையில், பன்னீர்செல்வம் 118 பேரை, நேற்று தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்களாக நியமித்துள்ளார்.
அ.தி.மு.க., பிளவுபட்ட நிலையில், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக, அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமி அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, 'நாங்களும் போட்டியிடுவோம். பா.ஜ., போட்டியிட்டால், அக்கட்சிக்கு ஆதரவு அளிப்போம்' என, பன்னீர்செல்வம் அறிவித்தார். இருவரும் வேட்பாளரை நிறுத்த உள்ளதால், இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள், இரு தரப்பினரும் இணைந்து ஒருவரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தின. ஆனால், பழனிசாமி தன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். தேர்தல் பணிகளை மேற்கொள்ள, 117 பேரை பொறுப்பாளர்களாக, பழனிசாமி நியமித்துஉள்ளார்.
இந்த சூழ்நிலையில், இடைத்தேர்தல் தொடர்பாக, நேற்று சென்னையில் பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., ஜெ.சி.டி.பிரபாகர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆலோசனை முடிவில், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உட்பட 118 பேரை, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக, பன்னீர்செல்வம் அறிவித்தார்.
'அவர்களுக்கு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முழு ஒத்துழைப்பு அளித்து, வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும்' என, பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.