வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை : ''பெண்களின் உரிமையை மற்றவர்கள் தீர்மானிக்கும் நிலை உள்ளது. இதை மாற்ற வேண்டிய நிலை அனைவருக்கும் உள்ளது'' என மதுரை யாதவா பெண்கள் கல்லுாரியின் 37 வது பட்டமளிப்பு விழாவில் கனிமொழி எம்.பி., பேசினார்.
முதல்வர் (பொறுப்பு) புஷ்பலதா வரவேற்றார். பட்டங்களை வழங்கி கனிமொழி பேசியதாவது: பட்டம் பெறுவது வாழ்வில் மறக்க முடியாத தருணம். பெண்கள் கல்வி கற்கக்கூடாது என ஒரு காலத்தில் உலகமே ஒன்றிணைந்து நின்றது. கல்வி, வேலைவாய்ப்பு, வாக்குரிமையை பெண்கள் போராடி பெற்றனர்.
அவர்களின் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை. இன்னும் உரிமையை முழுமையாக பெறவில்லை. உரிமையை மற்றவர்கள் தீர்மானிக்கும் நிலை உள்ளது. இதை மாற்ற வேண்டிய நிலை அனைவருக்கும் உண்டு.
அரசு பணியில் பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீட்டை கருணாநிதி முதல்வராக இருந்தபோது கொண்டுவந்தார். தற்போது 40 சதவீதமாக முதல்வர் ஸ்டாலின் உயர்த்தியுள்ளார். ஒரு கட்டத்திற்குள் பெண்கள் அடைபடாமல் எண்ணம், இலக்கை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும், என்றார்.
அமைச்சர் மூர்த்தி, அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரகதிரவன், மூத்த வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, கல்லுாரி தலைவர் அருண்போத்திராஜ், செயலாளர் இந்திராணி பங்கேற்றனர்.