வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,;'வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில், இன்று மழை பெய்யக்கூடும்' என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
![]()
|
மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இன்று வட கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட, 2 - 3 டிகிரி செல்ஷியஸ் குறைவாக இருக்கும்.
நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் அதே பகுதிகளில் நீடிக்கிறது.
இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக் கூடும்.
அதன்பின் தொடர்ந்து, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 31ம் தேதி தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, பிப்., 1ல் இலங்கை கடற்பகுதிகளை சென்று அடையும்.
இதனால், வரும் 30ம் தேதி, தமிழக கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யும்.
வரும் 31ம் தேதி, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். பிப்., 1ம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
![]()
|
எச்சரிக்கை
இன்று தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில், சூறாவளி மணிக்கு 40 - 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய, இந்திய பெருங்கடலின் பகுதிகளில், சூறாவளி காற்று மணிக்கு 40 - 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
அதேபோல் வரும் 31ம் தேதி மற்றும் பிப்., 1ம் தேதியும் இந்நிலை நீடிக்கும்.
இந்நாட்களில் மீனவர்கள், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.