வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை,-''நாட்டில் வட இந்தியர், தென் இந்தியர் என்ற வேறுபாடு தொடர்பான ஆய்வுகளில், எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை,'' என, வரலாற்று ஆய்வாளர் ராஜ் வேதம் கூறினார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ஆர்., கன்வென்ஷன் சென்டரில், 'நாம் ஆரியனும் இல்லை; திராவிடனும் இல்லை' என்ற தலைப்பில், வரலாற்று ஆய்வாளரும், பல்துறை நிபுணருமான ராஜ் வேதம் பேசியதாவது:
இந்தியாவின் வரலாறு மாற்றி, திரித்து எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் பண்பாடு, பழம்பெரும் பண்பாடு. ஆனால், அது வரலாற்றில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
முக்கியமாக காலனி ஆதிக்கம், பிரிட்டிஷ் மிஷனரி, சுயநலவாதிகளின் ஆதிக்கம், மார்க்சிஸ்டுகள் ஆகியோர் நம் வரலாற்றுக்கு எதிராக ஒன்றுபட்டு செயல்பட்டுள்ளனர். இவர்கள், இப்படிச் செய்வதற்கான தனித்தனி காரணங்களும் இருந்துள்ளன.
நம் புராதனமான வேதங்கள், மஹாபாரதம் உள்ளிட்டவை, ஏராளமான வானவியல் குறிப்புகள் வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்துள்ளன.

நம் முன்னோர், வான சாஸ்திரம் நன்கு அறிந்தவர்கள். வானில் கிரகங்கள் நகர்வதை ஊன்றி கவனித்து, அதைப் பற்றிய பல தகவல்களை வாய்மொழி மூலமாகவே, அடுத்து வரும் தலைமுறைகளுக்குத் தந்துள்ளனர்.
பழங்கால நுால்களில் எழுதப்படுவதற்கு முன், அவை நம்மிடம் இருந்தன. ஆரம்ப காலத்தில் நம் வரலாறு, பிரிட்டிஷ் மிஷனரிகளால்தான் எழுதப்பட்டு வந்தது. இப்போது, அது மார்க்ஸிஸ்ட் வரலாற்று ஆசிரியர்களின் கட்டுப்பாட்டிற்குள் போய் விட்டது.
நம் நாட்டில், கல்வி முறை பின்தங்கி இருக்கிறது. குறிப்பாக, சமூக வரலாற்று கல்வி திணித்து எழுதப்பட்டுள்ளது. உண்மையான வரலாறு, தற்போதுள்ள வரலாற்றில் இல்லை.
எனவே, என்னுடைய விருப்பத்தில் உண்மையான வரலாற்றை கண்டறிந்து, ஆய்வு நடத்தி ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டு வருகிறேன்.
பல்வேறு கட்ட ஆய்வுகளில் கிடைக்க பெற்ற தொல்பொருட்கள் அடிப்படையிலும், மரபு ரீதியாகவும் மொழியியல், கலாசார பண்பாடு ரீதியாகவும் என, எந்த விதத்தில் எடுத்து ஆய்வு நடத்தினாலும், வட இந்தியர், தென் இந்தியர் என்ற வேறுபாடுகளே கிடையாது. அதனால், நாம் ஆரியனும் இல்லை; திராவிடனும் இல்லை. நாமெல்லாம் தொன்மையான பாரதத்தின் புதல்வர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
'இண்டிகா அகாடமி' சார்பில், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அகாடமியின் சென்னை மண்டல இயக்குனர்கள் முத்துராமன், நந்தகுமார் உட்பட பலரும் பங்கேற்றனர்.