பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
தமிழக மருத்துவ துறையில் மொத்தமுள்ள, ஆறு இயக்குனர் பணியிடங்களில், மருத்துவக் கல்வி, மருத்துவ சேவைகள், மருந்து கட்டுப்பாடு, இ.எஸ்.ஐ., ஆகிய நான்கு பிரிவுகளின் இயக்குனர் பணியிடங்கள் காலியாக உள்ளன; பொறுப்பு அதிகாரிகளே, அந்த பணிகளை கவனித்து வருகின்றனர்.
மருத்துவ கல்வி இயக்குனர்,மருத்துவ சேவைகள்இயக்குனர் உள்ளிட்ட பதவிகள் பணிச்சுமையும், பொறுப்புகளும் மிகுந்தவை. அவற்றை கூடுதல் பொறுப்பாக, இன்னொரு அதிகாரியிடம் வழங்குவதால் பயன் இல்லை; இதனால், மருத்துவபணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ரொம்பவும் அரசிடம் வலியுறுத்தினா, இந்தப் பதவிகளுக்கும்,'அவுட் சோர்சிங்' முறையில ஆட்களை இறக்கிட போறாங்க!
தமிழக காங்., துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி பேட்டி:
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், பா.ஜ., போட்டியிடாமல், 'ஜகா' வாங்கி விட்டது. தேர்தல் மைதானத்தில் விளையாடுவதற்கு, அவர்களிடம் போட்டியாளர்கள் இல்லை. அந்த தொகுதியில், பா.ஜ.,வுக்கு செல்வாக்கும் இல்லை; நிர்வாகிகளும் இல்லை. ஆனால், அக்கட்சியிடம் ஆதரவை தேடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் ஓடிச் சென்றது புதிராக உள்ளது.
ஒரு தேர்தல்லயும் ஜெயிக்காத, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வீடு தேடிப்போய், காங்., வேட்பாளர் இளங்கோவன் ஆதரவு கேட்டது மட்டும் சரியா?
அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு தலைவர், டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
தமிழகத்தில் நான்கு ஆண்டுகளாக, மகப்பேறு விடுப்புக்கான பண பலன்களை, மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துள்ள பெண் டாக்டர்கள் பலர் இன்னமும் பெறவில்லை என்பது, மிகவும் வருத்தமளிக்கிறது. மகப்பேறு காலத்தில் தரவேண்டிய ஊதியம், பட்டப்படிப்பிற்கான ஊதிய உயர்வு போன்ற குறைகளை கேட்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், மாதந்தோறும் குறை கேட்கும் மன்றத்தை அரசு நடத்த முன் வர வேண்டும்.
ஏற்கனவே நடக்கிற பல குறைதீர் முகாம்களே, கண்துடைப்பாகத் தான் இருக்குது... இதுல, இன்னொரு குறைதீர் மன்றமா?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:
திருநெல்வேலி மாவட்டம், கடம்பன்குளம் ரேஷன் கடையில், இம்மாதம், 19ல், 'பிளாஸ்டிக்' அரிசி கலந்த ரேஷன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் உள்ள அரிசியோடு, பிளாஸ்டிக் அரிசி கலந்தது எப்படி... இதற்கு காரணம் யார் என்பதை முறையாக விசாரிக்க வேண்டும். தவறு இழைத்தவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத்தர வேண்டும்.

தேர்தலில் மக்கள் ஆதரவுல ஜெயிச்சு பதவிக்கு வர்றவங்களிடம், சிலர் ஒட்டுண்ணிகள் போல ஒட்டி பலன் அடைவது மாதிரி, நல்ல அரிசியில பிளாஸ்டிக் அரிசியும் கலந்துடுச்சோ?
பொள்ளாச்சி தி.மு.க., - எம்.பி.,சண்முகசுந்தரம் பேட்டி:
தமிழகரயில்வே திட்டங்களுக்கு, மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு, முறையாக நிதி ஒதுக்கப்படுவதுகிடையாது. வெளிநாட்டு முதலீடுகளில், தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்குவது இல்லை. தமிழகம் மருத்துவத் துறையில் முன்னணி மாநிலமாக திகழ்ந்தாலும், இங்கு மருந்துகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை துவங்க, மத்திய அரசு அனுமதி வழங்குவதில்லை.
தி.மு.க., - எம்.பி.,யின் குற்றச்சாட்டு நிஜமா, இல்லையா என்பது குறித்து, புள்ளி விபரங்களுடன் பா.ஜ.,வினர் தான் பதிலடி தரணும்!
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்அறிக்கை:
ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், மஹா சிவராத்திரி விழாவை, ஐந்து பெரு நகரங்களில் பிரமாண்டமாக கொண்டாடுவது வரவேற்கத்தக்கது. ஆனால், இதில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளும், கோவில் நிதி வீணடிக்கப்படுவதும் வேதனைக்குரியது. கோவில் நிதியை பயன்படுத்தாமல், அனாவசிய செலவுகளின்றி, நன்கொடையாளர்கள் வாயிலாக சிவராத்திரி விழாவை நடத்த வேண்டும்.
நியாயமான கோரிக்கை... துறையின் அமைச்சர் சேகர்பாபு பரிசீலித்தால் நன்றாக இருக்கும்!
த.மா.கா., மாநில பொதுச் செயலர் ராஜம் எம்.பி.நாதன் அறிக்கை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், சுய உதவிக் குழுக்களை ஆளுங்கட்சியினர் விலை பேசுகின்றனர். வீடு வீடாகச் சென்று சிக்கன், மட்டன், பால், அரிசி போன்றவற்றை வாங்கிக் கொடுக்கின்றனர்.
வீதிக்கு ஒரு அமைச்சர், குடும்பத்திற்கு ஒரு நிர்வாகி என, பழைய திருமங்கலம் 'பார்முலா'வும், நேற்றைய ஆர்.கே.நகர் பார்முலாவும்தோற்கும் வகையில், புதிய புதிய உத்திகளுடன் ஆளுங்கட்சி களமிறங்கியுள்ளது. இப்படி ஓட்டு வாங்கி வெற்றி பெறும் நிலை மாறி, உண்மையான ஜனநாயகம் மலர்வது எப்போது?
இந்தச் செயல்களில் ஒன்றை கூட, இவரது கூட்டணி கட்சியான, அ.தி.மு.க., தரப்பு செய்யாது என, இவரால் உத்தரவாதம் தர முடியுமா?