வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தமிழகத்தின் உத்திரமேரூரில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு, உலகையே வியக்க வைக்கிறது. அது, மினி அரசியலமைப்பு போன்று உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று 'மன் கி பாத் ' நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு ரேடியோ மூலம் உரையாற்றி வருகிறார்.
பழங்குடியினர் ஆர்வம்
இந்தாண்டின் முதல் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பழங்குடியினர் மற்றும் அந்த சமூகத்துடன் தொடர்புடையவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது. நகர வாழ்க்கையுடன் ஒப்பிடுகையில் பழங்குடியின வாழ்க்கை வித்தியாசமானது. அதற்கு என சவால்கள் உள்ளன. இதனையும் தாண்டி, தங்களது பாரம்பரியத்தை பாதுகாக்க பழங்குடியினர் ஆர்வமாக உள்ளனர்.

விருது
பழங்குடியினரின் மொழிகளான டோடோ, ஹோ, குய், குவி மற்றும் மண்டா ஆகியவை பற்றிய பணிகளில் ஈடுபட்ட பல பெரும் பிரபலங்கள் பத்ம விருது பெற்றுள்ளனர். அது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயம். சித்தி, ஜார்வா மற்றும் ஒன்ஜ் ஆகிய பழங்குடியினரை பற்றிய பணிகளில் ஈடுபட்டவர்கள் இந்த முறை பத்ம விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதேபோன்று நமது பாரம்பரிய இசைக்கருவிகளான சந்தூர், பாம்ஹம், துவிதாரா ஆகியவற்றின் மெல்லிசையை பரவ செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர்களும் இந்த முறை பத்ம விருது பெற்றுள்ளனர்.
மக்கள் பங்கேற்பு
இந்தியா முன்மொழிந்ததை தொடர்ந்து, சர்வதேச யோகா தினம் மற்றும் சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை கொண்டாட ஐக்கிய நாடுகள் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நடக்கும் இரண்டு பிரசாரங்களிலும் மக்கள் பங்கேற்பதால், புரட்சி வரும். யோகாவையும், உடற்தகுதியையும் தங்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மக்கள் ஏற்றுள்ளதால், இந்த பிரசாரத்தில் அதிகளவில் பங்கேற்றுள்ளனர். அதேபோல், சிறுதானியங்களையும் அதிக மக்கள் எடுத்து கொண்டு வருகின்றனர்.

மக்கள் பரவசம்
கடந்த 6 முதல் 8 தேதி வரையில் பர்ப்பிள் பெஸ்ட் என்ற தலைப்பில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான திருவிழா நடந்தது. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோவாவின் பிரசித்தி பெற்ற மீராமர் பீச்சில் முழு அளவில் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என அறிந்து மக்கள் பரவசம் அடைந்து உள்ளனர்.
மின்னணு கழிவுகள்
ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி டன் மின்னணு கழிவுகள் தூக்கி எறியப்படுகின்றன என ஐ.நா., ஆய்வு அறிக்கை கூறுகிறது. இந்த மின்னணு கழிவுகளில் இருந்து 17 வகையான விலை மதிப்பற்ற உலோகங்களை வெவ்வேறு நடைமுறைகளின் வழியே நாம் பிரித்து எடுக்க முடியும். ஒருவர் தனது பழைய கருவிகளை மாற்றும்போது அது முறையாக குப்பைக்கு கொண்டு செல்லப்படுகிறதா இல்லையா என்பது பற்றி கவனம் கொள்வது முக்கியம். மின்னணு கழிவுகள் முறையாக நீக்கப்படவில்லை எனில், அது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். கவனமுடன் கையாளப்பட்டால், பொருளாதார மீட்சிக்கான மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டிற்கான ஆற்றல் மிக்க சக்தியாக அது மாறும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.