கவுஹாத்தி: 22 வயதில் இருந்து 30 வயது காலகட்டத்தில் பெண்கள் தாய்மை அடைய வேண்டும் என நிகழ்ச்சி ஒன்றில் அசாம் முதல்வர் பேசினார். இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வட கிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு பெண்கள் சிறுவயதில் திருமணம் செய்வதையும், திருமணத்திற்கு முன்பு பெண்கள் கருத்தரிப்பதை தடுக்கும் விதமாக புதிய சட்டத்தை கொண்டு வந்து பாஜ., அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேலும் 14 வயதுக்கு குறைவான பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழும், 14-18 வயது பெண்களை திருமணம் செய்யும் நபர்கள் மீது குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அசாம் அமைச்சரவை முடிவெடுத்து ள்ளது.
இந்நிலையில் கவுஹாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் அசாம் முதல்வர் ஹிந்தா பிஸ்வாஸ் சர்மா பேசுகையில்,
18 வயதுக்கு குறைவான பெண்களுக்கு திருமணம் நடப்பதை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் சிறு வயதில் கருத்தரிப்பது தவறான விஷயமோ, அதேபோல் வயது அதிகமான பிறகு குழந்தை பெற்றுக் கொள்வதும் உகந்தது அல்ல.

அனைத்து விஷயங்களையும் அதற்கு உரிய வயதில் செய்ய வேண்டும். அதற்கு தான் கடவுள் நம்மை படைத்துள்ளார். எனவே, 22 வயதில் இருந்து 30 வயது காலகட்டத்தில் பெண்கள் தாய்மை அடைய வேண்டும். இந்த வயதில் இருக்கும் பெண்கள் திருமணமாகாமல் இருந்தால் விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முதல்வரின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. மேலும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திருமணம் என்பது பெண்களின் தனிப்பட்ட உரிமை எனவும், இந்த வயதில் திருமணம் செய்ய வேண்டும், குழந்தை பெற வேண்டும் என்று பேசுவது முதல்வரின் வேலை இல்லை பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.