சென்னை: போலீசார் குறித்து அவதூறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
கைது
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு புகாரில், ஆரணி போலீஸ் ஸ்டேசனுக்குள் புகுந்து சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் அவதூறாக பேசினார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது போலீசாரின் கவனத்திற்கு செல்லவே, வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். நேற்று அவருக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்தது. இதனையடுத்து ஆதரவாளர்களோடு ஆரணிக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாஸ்கரன், போலீஸ் ஸ்டேசன் முன்பு தனது ஆதரவாளர்களால் புடைசூழ அழைத்து செல்லப்பட்டார். அப்போது, பாஸ்கரன் போலீசுக்கு எதிராக குரல் எழுப்ப, அவரது ஆதரவாளர்கள் அதனை பின்தொடர்ந்தனர். போலீசை, ஆபாசமாகவும், நாயுடன் ஒப்பிட்டும், எச்சரித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனை போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
கோஷம்
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், போலீசாரை மோசமாக விமர்சித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது போலீஸ் தலைமையின் கவனத்திற்கு செல்லவே, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் அனுமதியில்லாமல் ஊர்வலம் நடத்தியது, போலீசுக்கு எதிராக கோஷமிட்டவர்கள் என 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வலியுறுத்தல்
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: போலீசார் தங்கள் பணியைச் செய்ததற்காக, அவர்கள் மாண்பை குறைப்பது போல், "காவல் நாய்களே", "எச்சைப் பிழைப்பு", போன்ற கோஷங்களை எழுப்புவது காக்கி சட்டைக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்பதை இது போன்ற அரசியல் கட்சிகள் உணர வேண்டும்.

ஓரிரு போலீசார்கள் செய்யும் தவறுகளுக்கு, ஒட்டு மொத்த போலீசார்களையும் அவதூறாகப் பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. தங்களது உயிரை துச்சமாகக் கருதி, மக்களைக் காக்க உழைக்கும் போலீஸ் துறையினரை, தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும், அரசியல் காரணங்களுக்கும், இது போன்று அவதூறாகப் பேசுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
போலீசார்களை மன உறுதியை குறைக்கும் வகையில் கோஷங்களை எழுப்பும் தங்களது கூட்டணி கட்சியினர் மேல், போலீஸ் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.