வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: கடவுள் கிருஷ்ணரும், ஹனுமனும் தான் உலகில் மிகப்பெரிய ராஜதந்திரிகள் என வெளியுறுவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ஆங்கில புத்தகமான ''The India way: Stragegies for an Uncertain world'' என்ற புத்தகத்தை மராத்தி மொழியில், மொழிபெயர்க்கப்பட்டு 'பாரத் மார்க்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் ஜெய்சங்கர் பேசியதாவது: உலகில் மிகப்பெரிய ராஜதந்திரிகளாக கடவுள் கிருஷ்ணரும், ஹனுமனும் திகழ்ந்தனர். ஹனுமனை எடுத்து கொண்டால், தனது ராஜதந்திரத்தை தாண்டி, தனது பணியை தாண்டி, கடவுள் சீதையை பார்த்ததுடன், இலங்கைக்கும் தீவைத்தார் எனக்கூறினார்.

மேலும் அவர், கடவுள் கிருஷ்ணர் சிசுபாலனை பல முறை மன்னித்தார். சிசுபாலனின் 100 தவறுகளை பொறுத்து கொள்வதாக கிருஷ்ணர் வாக்குறுதி அளித்திருந்தார். இதனை தாண்டிய பிறகு, சசிபாலனை கடவுள் தண்டித்தார். இது, சிறந்த முடிவெடுப்பவரின் மிக முக்கியமான குணங்கள் ஒன்றின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என ஜெய்சங்கர் கூறினார்.

மேலும், அணுசக்தி வைத்திருக்கும் பாகிஸ்தான் நம்மை தாக்குமா என்ற கேள்விக்கு, ஜெய்சங்கர் கூறுகையில், பாண்டவர்களால் உறவினர்களை தேர்வு செய்ய முடியவில்லை. அதேபோல், நம்மால் அண்டை நாடுகளை தேர்வு செய்ய முடியாது. இது உண்மை. நல்ல எண்ணம் மேலோங்கும் என இயற்கையாகவே நாம் நம்புகிறோம் என பதிலளித்தார்.

ஜெய்சங்கர் மேலும் கூறும் போது, விதிகள் அடிப்படையிலான உத்தரவை துரியோதனனும், கர்ணனும் மதித்தது கிடையாது. இருவரின் நட்பானது, அவர்களுக்கே, குடும்பத்தினருக்கோ எந்த பலனையும் அளிக்கவில்லை. சமூகத்தில் எந்த நேர்மறையான தாக்கத்தையும் உருவாக்கவில்லை. மாறாக, அது அவர்களின் உயிரை வாங்கியது. பெரிய அழிவையும் மீறமுடியாத துயரத்தையும், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பரிதாபகரமான துன்பத்தையும் ஏற்படுத்தியது என கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து சீனா மற்றும் பாகிஸ்தான் குறித்து மறைமுகமாக விமர்சித்தார்.
ஜெய்சங்கர் மேலும் கூறுகையில், வெளியுறவுத்துறை செயலாளராக இருப்பதே எனது லட்சியத்தின் எல்லை. அமைச்சராவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை. பிரதமர் மோடியை தவிர எந்த பிரதமரும் என்னை அமைச்சராக்கியிருப்பார் என்று உறுதியாக தெரியவில்லை. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.