வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலில் அசத்திய செர்பிய வீரர் ஜோகோவிச் 10வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். விறுவிறுப்பான பைனலில் 6-3, 7-6, 7-6 என, கிரீசின் சிட்சிபாசை தோற்கடித்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-4' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 3வது இடத்தில் உள்ள கிரீசின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய ஜோகோவிச், 'டை பிரேக்கர்' வரை சென்ற இரண்டாவது செட்டை 7-6 என போராடி தன்வசப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய ஜோகோவிச், 'டை பிரேக்கர்' வரை சென்ற மூன்றாவது செட்டை 7-6 என வென்றார்.

இரண்டு மணி நேரம், 56 நிமிடம் நீடித்த பைனலின் முடிவில் ஜோகோவிச் 6-3, 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 10வது முறையாக (2008, 2011-13, 2015-16, 2019-21, 2023) ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் இத்தொடரில் அதிக முறை கோப்பை வென்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த இரு இடத்தில் தலா 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவின் ராய் எமர்சன், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் உள்ளனர்.
தவிர இது, ஜோகோவிச் கைப்பற்றிய 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். இதன்மூலம் அதிக கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தை ஸ்பெயினின் ரபெல் நடாலுடன் (22 பட்டம்) பகிர்ந்து கொண்டார்.