வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ''புதிய கல்விக் கொள்கையால் மட்டுமே, இந்தியாவின் இலக்கை அடைய முடியும். இதை அறியாமையால் சிலர், எதிர்த்து வருகின்றனர்,'' என, தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார்.

சின்மயா வித்யாலயா பள்ளியின் பொன்விழா விழா, சென்னையில் நேற்று நடந்தது. இவ்விழாவில், தமிழக கவர்னர் ரவி பேசியதாவது: என்னைப் பொருத்தவரை, பகவத்கீதையை போன்ற சிறந்த நுால் வேறொன்றும் இல்லை. வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் அதில் உள்ளது.
பூமியில் பாரதம் மட்டுமே, உலகில் அனைவரும் ஒன்று என்கிற பார்வையை உடையது. நம் பாதையை தொலைத்ததால், பாரதத்தின் உன்னதமான பாதையை உலகத்திற்கு காட்ட தவறிவிட்டோம்.
தற்போது, வலிமையான தலைமையாலும், அவரது தெளிவான பார்வையாலும், சுவாமி விவேகானந்தரின் கனவை நனவாக்கும் வகையில், பழைய நிலைமை சீராகி வருகிறது. இனி நாம் நேரத்தை வீணாக்க கூடாது. அடுத்த, 25 ஆண்டுகளில், மகிழ்ச்சியான புதிய உலகை வழிநடத்தும் நிலைக்கு, இந்தியாவை மாற்றும் கடமை நமக்கு உள்ளது.
புதிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது. சிலர் அதை அறியாமையால் எதிர்த்து வருகின்றனர். புதிய கல்விக் கொள்கையால் மட்டுமே, இந்தியாவின் இலக்கை அடைய முடியும். ஆங்கிலேய ஆட்சி மகிழ்வானது என, உயர் பதவியில் இருக்கும் சிலர் பேசுவது பரிதாபத்திற்குரியது.
ஜனநாயகத்திற்கு ஆபிரகாம் லிங்கனை உதாரணம் காட்டுகின்றனர். அவருடைய காலத்தில், பெண்களுக்கு உரிமை இல்லை. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளாக, பெண்களுக்கு இந்தியா அதிகாரமும், சுதந்திரமும் அளித்துள்ளது.

நம் பாரம்பரியம் மீது பெருமை கொள்ள வேண்டும். புராதன சின்னங்கள் நாம் யார் என்பதை காட்டுகிறது; அதை பேணி போற்ற வேண்டும். நம் கடமையை நிறைவேற்ற வேண்டும்; ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
ஆங்கிலேய காலத்தில் இருந்து, பிரிவினை மேலோங்கி உள்ளது. அது, இனம், மதம் என தற்போதும் தொடர்கிறது. அதை மறந்து அனைவரும் ஒன்றே என்கிற எண்ணத்துடன் வளர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.