வடவள்ளி : மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாகம், கந்தசஷ்டி விழா, தைப்பூச திருவிழா ஆகிய திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படும்.நடப்பாண்டு தைப்பூச திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி நடந்தது.
நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கோ பூஜை, 5:30க்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய், கற்பக விருட்ஷ வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்தார்.
காலை, 7:23க்கு மங்கள வாத்தியங்கள் முழங்க, சேவல் உருவம் பொறிக்கப் பட்டு, பூஜிக்கப்பட்ட கொடி, மங்கள நாண்களால் ஏற்றப்பட்டது. பக்தர்கள், 'அரோகரா... அரோகரா' என, பக்தி பரவசத்தில் கோஷம் எழுப்பினர்.
சுப்பிரமணிய சுவாமி, பாலசுப்பிரமணியர் அலங்காரத்தில் நேற்று காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்தனர்.
திண்டுக்கல் மாவட் டம், பழநியில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கிழக்கு ரத வீதி பெரிய நாயகி அம்மன் கோவிலில் நேற்று கொடியேற்றப் பட்டது. காலை, 10:17 மணிக்கு, பக்தர்கள் 'அரோகரா' கோஷம் முழங்க சூரியன், சந்திரன், சேவல், மயில், வேல் வரையப்பட்ட கொடியேற்றப்பட்டது.பின், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு புதுச்சேரி சப்பரத்தில் ரத வீதி உலா நடந்தது.தைப்பூச திருவிழாவின் ஆறாம் நாளான, பிப்., 3 இரவு, 9:00 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு ரத வீதியில் நடக்கிறது. பிப்., 4ல் தைப்பூசத்தன்று காலை, 11:00 மணிக்கு மேல் மதியம், 12:00 மணிக்குள் சுவாமி, தேரில் எழுந்தருளல் நடைபெறும்.