போபால் : மத்திய பிரதேசத்தில் உள்ள ஹோசங்காபாத் ரயில்வே ஸ்டேஷனின் பெயரை, நர்மதாபுரம் என அதிகாரப்பூர்வமாக மாற்றம் செய்து மேற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு தலைநகர் போபாலில் இருந்து 75 கி.மீ., தொலைவில் நர்மதாபுரம் நகரம் அமைந்துள்ளது.
முன்னதாக இந்த நகரின் பெயர் ஹோசங்காபாத் என அழைக்கப்பட்டது. பின், 2022ல் நர்மதாபுரம் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதேபோல் இங்கு அமைந்துள்ள ஹோசங்காபாத் ரயில்வே ஸ்டேஷனின் பெயரையும், நர்மதாபுரம் என மாற்றம் செய்ய மாநில அரசு, அரசிதழில் வெளியிட்டது.
பெயர் மாற்றம் செய்ய, தடையில்லா சான்றை, மத்திய அரசு அளித்ததை அடுத்து, நர்மதாபுரம் ரயில்வே ஸ்டேஷன் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, மேற்கு மத்திய ரயில்வே நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கடந்த 2021ம் ஆண்டு முதலே, பல்வேறு நகரங்கள், ரயில் நிலையங்களின் பெயர்களை மத்திய பிரதேச அரசு மாற்றி வருகிறது.
ஹபீப்கஞ்ச் ரயில்வே ஸ்டேஷனை, ராணி கமலாபதி ரயில்வே ஸ்டேஷன் என பெயர் மாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது.