ராமநாதபுரம் : ''சட்டசபை தேர்தலில் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளில், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை,'' என, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி குற்றம்சாட்டி உள்ளது.
அந்த அமைப்பின் மாநில பொதுச்செயலர் மயில் ராமநாதபுரத்தில் நேற்று கூறியதாவது:
சட்டசபை தேர்தலின்போது, பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் வரும் என, தி.மு.க., தெரிவித்தது. ஆனால், நிதியமைச்சர், 'அதற்கு வாய்ப்பில்லை' என்கிறார்.
இடைநிலை ஆசிரி யர்களுக்கு இடையிலான ஊதிய முரண் பாடுகள் களையப்படாமல், 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியமாக்கலை அ.தி.மு.க., அரசு கொரோனா காலத்தில் ஓராண்டிற்கு நிறுத்தியது.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'அதை தருவோம்' என்றனர். அதற்கு மாறாக நிரந்தரமாக நிறுத்திவிட்டனர்.
உயர்கல்விக்கு ஊக்க ஊதியத்தை திரும்ப தருவதாக உறுதி அளித்தது. தற்போது அதையும் நிறுத்தி விட்டனர்.
அகவிலைப்படி உயர்வை ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்க வேண்டும். அதையும் அரசு தரவில்லை. மொத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓட்டுகளை கருதியே, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை கொடுத்தனர்.
ஆட்சிக்கு வந்ததும் அவற்றின் ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் காற்றில் பறக்கவிட்டனர். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.