ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் லால் சவுக் பகுதியில், வரலாற்று சிறப்புமிக்க மணிக்கூண்டு அமைந்துள்ள இடத்தில், பலத்த பாதுகாப்புக்கு இடையே காங்கிரஸ் எம்.பி., ராகுல், நேற்று தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான ராகுல், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஒற்றுமை யாத்திரை என்ற நடைப்பயணத்தை கடந்த ஆண்டு செப்., 7ல் துவங்கினார்.
தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, டில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை கடந்து ஜம்மு - காஷ்மீர் வந்தடைந்தது.
ஜம்மு - காஷ்மீரில், ஜன., 30ம் தேதி இந்த நடைபயணத்தை முடிக்க திட்டமிடப்பட்டது. நடைப்பயணத்தை முடித்தவுடன் ராகுல் தேசியக்கொடியை ஏற்ற திட்டமிடப்பட்டது.
ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜம்மு - காஷ்மீரில் பொது இடத்தில் வைத்து தேசியக்கொடியை ஏற்ற ராகுலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதையடுத்து, காஷ்மீரின் மவுலானா ஆசாத் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வைத்து தேசியக்கொடியை இன்று ஏற்ற திட்டமிடப்பட்டது.
ஆனால், ஸ்ரீநகரின் லால் சவுக் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மணிக்கூண்டு அருகே தேசியக்கொடியை ஏற்ற மாவட்ட நிர்வாகம் நேற்று அனுமதி வழங்கியது.
ஆனால், கொடி ஏற்ற நிகழ்ச்சியை நேற்றைய தினமே நடத்தி முடிக்க நிபந்தனை விதித்தது.
இதையடுத்து அப்பகுதியில் நேற்றைய தினம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. லால் சவுக் பகுதியின் 1 கி.மீ., சுற்றளவு முழுதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு முதலே அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.
தீவிர பாதுகாப்புக்கு நடுவே காங்., - எம்.பி., ராகுல், தேசியக்கொடியை நேற்று ஏற்றி வைத்தார். அவருடன் காங்., பொது செயலர் பிரியங்கா உட்பட தலைவர்கள் பங்கேற்றனர்.