வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லக்னோ: நியூசிலாந்திற்கு எதிரான 2வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், இந்தியா,-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நடக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் களமிறங்கி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து 99 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் சாண்டனர் 19 ரன்னும், பின் ஆலன், கான்வே தலா 11 ரன்களுக்கும் சாப்மேன் மற்றும் பிரேஸ்வல் தலா 14 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.

இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 100 ரன் என்ற எளிய இலக்காக கொண்டு அடுத்து விளையாடிய இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் ஆட்டமிழக்காமல் 26 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கிடையே கடைசி மற்றும் 3 வது டி-20 போட்டி பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெறுகிறது.